சாய் அப்யங்கர்


பிரபல பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகன் சாய் அப்யங்கர். 21 வயதாகும் இவர் சென்னை ஐஐடியில் கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறார். தனது பெற்றோர்களைப் போலவே சாய் அப்யங்கர் சின்ன வயதில் இருந்து  இசையில் ஆர்வம் கொண்டவர். பாடல்கள் எழுதுவது , பாடுவது , இசையமைப்பது , ப்ரோகிராமிங் , என தொழில்நுட்ப ரீதியாகவும் பயிற்சி பெற்றிருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத்தின் இசைக்குழுவின் பிரபல பாடல்களுக்கு ப்ரோகிராமிங் செய்துள்ளார்.  சாய் அப்யங்கர் இசையமைத்து வெளியிட்ட கட்சி சேர மற்றும் ஆச கூட ஆகிய இரு பாடல்களும் பட்டிதொட்டி எல்லாம் ஹிட் அடித்தன. 


தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 45 ஆகிய இரு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைக்கும் அனுபவத்தை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சாய் அப்யங்கர் பகிர்ந்துகொண்டார்


ரீல்ஸில் ஹிட் அடிக்க பாட்டு போடக்கூடாது


" எனக்கு எப்போதும் சவாலான சூழ்நிலைகளை கையாள்வது பிடிக்கும் . இந்த இரு படங்களுக்கு இசையமைக்கும் அனுபவங்களை நான் அப்படிதான் எடுத்துக் கொள்கிறேன். இயக்குநர்கள் ஒரு காட்சிக்கான உணர்ச்சியை சொல்வது அதற்கு இசையமைப்பது என இந்த அனுபவம் நன்றாக தான் இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக நான் வேலை செய்யும் இயக்குநர்கள் எனக்கு நன்றாக ஆதரவு தருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ஹிட் அடிப்பதற்காக மட்டுமே இசையமைக்கக் கூடாது. ஹுகும் பாடலைப் போட்டு நான் நடந்து வந்தால் அது அப்படியே எனக்காக போட்ட மாதிரி இருக்க வேண்டும் என்று தான் சாமானியர்கள் விரும்புவார்கள். ஹுகும் நல்ல பாட்டு இல்லை என்று நான் சொல்லவில்லை. அந்த பாடலை உதாரணமாக வைத்துக் கொண்டு ரீல்ஸ்களூக்காக மட்டும் பாட்டு போடக்கூடாது" என சாய் அப்யங்கர் தெரிவித்துள்ளார் 






ஒரு பக்கம் சாய் அப்யங்கர் இப்படி தெரிவித்துள்ள நிலையில் மறுபக்கம் அனிருத் இன்ஸ்டாகிராமின் டிரெண்டாகும் இருங்க பாய் மாதிரியான் வரிகளை வைத்து தான் பாடல்களையே உருவாக்குகிறார். இந்தியன் 2 முதல் இன்று வெளியாகியிருக்கும் விடாமுயற்சி படத்தின் பாடல் வரை அனிருத்தின் பாடல்கள் உடனடியாக ஹிட் அடிக்கின்றன ஆனால் இந்த பாடல்கள் நீண்ட நாள் ரசிகர்களின் மனதில் நிற்பதில்லை என்பது தான் அனிருத் மீது வைக்கப்பட்டும் பொதுவிமர்சனமாக உள்ளது.