உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக் கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கெனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 9ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வந்தது, 23ஆம் தேதி வரையும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது.


தள்ளிப்போன அரையாண்டுத் தேர்வு


அதேபோல,  1 முதல் 5ஆம் வகுப்புக்கு டிசம்பர் 16ல் தொடங்கி 23ஆம் தேதி வரையும் நடைபெற இருந்தது. எனினும் ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தேர்வுகள் தள்ளிப் போயின. எனினும் தேர்வு விடுமுறையில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.


அதாவது  1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் புத்தாண்டான ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுமுறை நாட்களில் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்காங்கே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகப் புகார் எழுந்தது.


விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக் கூடாது


எனினும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக் கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தனியார் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ’’சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாரர் மொஹைதீன் அப்துல் காதர் என்பவரின் இரு மகள்கள் ஆயிஷா ஷாஜனா மற்றும் அனபா இர்னாஸ் ஆகியோரை சிறப்பு வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறையின்றி வருகை புரிந்தால் மட்டுமே கோல்டன் ஜுப்ளி பள்ளியில் பயில அனுமதிக்க இயலும் என்று எழுதி வாங்கப்பட்டுள்ளது சார்ந்து வழக்கு தொடர்ந்துள்ளார்.




இவ்வழக்கு சார்ந்து பள்ளி நிர்வாகத்தால் , சிறப்பு வகுப்புகளுக்கு வருகை புரிவது கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு 02.07.2024 அன்று மேல் நடவடிக்கை இன்றி முடித்துவைக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறாமல் இருக்க தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உரிய அறிவுரை வழங்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ( தனியார் பள்ளிகள் ) அறிவுறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.


பள்ளிகள் திறப்பு எப்போது?


விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.