கேரள திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார். 


மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கருத்துக்கணிப்புகளுக்கு எதிராக தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தல் முடிவுகளை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் இந்தியாவை உற்றுநோக்கி வந்தது. 


 



ஆனால் இந்த முறை வரலாற்று சாதனையாக கேரளாவில் முதல்முறையாக ஒரு மக்களவை தொகுதியில் பாஜக வெற்றி  வாங்கி சூடியுள்ளது. திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் 4 லட்சத்து 553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வி.எஸ். சுனில் குமார் 3 லட்சத்து 27 ஆயிரத்து 405 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே. முரளிதரன் 3 லட்சத்து 19 ஆயிரத்து 380 வாக்குகள்  பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுவரையில் கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் காட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டிகள் நிலவி வந்தன. இவர்கள் இருவரில் ஒருவர் தான் மாறி மாறி வெற்றி பெற்று வந்தார்கள். இந்த முறை காங்கிரஸ் கட்சயின் சார்பில் கே. முரளிதரன் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுனில்குமாரும் போட்டியிட்டனர். அந்த வகையில் பாஜக கட்சியின் சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுவதாக களமிறங்கிய போது எதிர் கட்சிகள் சரமாரியாக கிண்டல் கேலி செய்தனர். இருந்த போதிலும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட சுரேஷ் கோபிக்கு மக்கள் தாராளமான ஆதரவை கொடுத்து 71000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைய செய்துள்ளனர்.   


 



 


வெற்றி வாகை சூடிய நடிகர் சுரேஷ் கோபி செய்தியாளர்களை சந்தித்த போது உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். "திருச்சூர் தொகுதியை நான் தேர்ந்து எடுக்கவில்லை. அது என்னிடம் வந்தது. லூர்து அன்னைக்கு கிரீடம் கொடுத்தவர்கள் திருச்சூர் மக்கள். அதே போல திருச்சூரினை என் தலையில் வைத்து கொள்வேன். நான் சொன்ன வார்த்தைகளை பின்வாங்க மாட்டேன், ஏமாற்ற மாட்டேன். ட்ரோல் செய்தவர்கள் நிம்மதியாக தூங்கலாம். 


திருச்சூர் மக்களின் மனங்களையும் முடிவுகளையும் திசை திருப்பும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் கடவுள் அவர்களை என் பக்கம் கொண்டு வந்தார். இந்த அதிசயம் மிக சிறப்பாக அமைந்தது. நான் எப்போதும் திருச்சூர் மக்களுக்கு கை கொடுப்பேன். இது அனைத்தும் என்னுடைய அரசியல் கடவுள் நரேந்திர மோடியால் நிகழ்ந்தது. நான் வெறும் அறிக்கையை மட்டும் நம்புபவன் அல்ல. ஒட்டுமொத்த கேரளவுக்காகவும் நான் பாடுபடுவேன். கேரளா எம்.பியாக பணியாற்றுவேன்" என தெரிவித்து இருந்தார்.