பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெண் நிருபருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட விவகாரத்தில் நடிகரும்,பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி மன்னிப்பு கோரியுள்ளார். 


மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இன்றும் ரசிகர்களிடத்தில் கொண்டாடப்படுபவர் சுரேஷ் கோபி. 1965 ஆம் ஆண்டு ஓடையின் நின்னு என்ற படத்தில் தனது 7வது வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு நிறமுள்ள ராவுகள் என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ள சுரேஷ் கோபி, தமிழில் சமஸ்தானம், ஐ ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். 


இப்படியான நிலையில் அவர் பாஜக கட்சியில் உறுப்பினராகவும் உள்ளார். மேலும் ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். இதனிடையே கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுரேஷ் கோபி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவரது கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பெண் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு மலையாளத்தில் மகளே என தொடங்கி பதிலளித்தார். அப்போது சுரேஷ் கோபியின் கை அப்பெண்ணின் தோள் மீது இருந்தது. 


இதனால் அப்பெண் அங்கிருந்து நகர்ந்து சென்று பின் மீண்டும் வந்து கேள்வி கேட்டார். அப்போதும் பதில் சொல்லும்போது சுரேஷ் கோபி கை அப்பெண் மீது தான் இருந்தது. அந்த பெண் நிருபர் அவரின் கையை தட்டி விடும் காட்சிகளும் இடம் பெற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் சுரேஷ் கோபி செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, அவர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினார். 


தனது விளக்கத்தில், “பெண் நிருபரிடம் நட்பு ரீதியாகவே அப்படி நடந்து கொண்டேன். அதை அவர் தவறாக எண்ணும் பட்சத்தில், அப்பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறேன். என்னுடைய செயலை தவறாக எண்ணினார் என்றால் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறேன். வருந்துகிறேன்” என தெரிவித்தார். ஆனால் சுரேஷ் கோபியின் பதிவுக்கு பெண் நிருபர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ”சுரேஷ் கோபி நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்காமல், ஏதோ விளக்கம் அளிப்பது போல உள்ளது. இதனை சட்ட ரீதியாக அணுக உள்ளேன்’ என கூறினார். 


தொடர்ந்து கோழிக்கோடு நகர காவல்துறையில் அவர் புகார் ஒன்றையும் அளித்தார். இதனடிப்படையில் சுரேஷ்கோபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




மேலும் படிக்க: ”சமூக நீதி எனும் வார்த்தையை ரஞ்சித் தான் சொல்லி கொடுத்தார்” .. நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி..!