Japan Movie Trailer: ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஜப்பான் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குநர் ராஜூ முருகன். இவரது இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஜப்பான் படம் உருவாகியுள்ளது. பருத்தி வீரனில் தொடங்கி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வரும் கார்த்திக்கு ஜப்பான் படம் 25வது படமாக உள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன், கே.எஸ். ரவிக்குமார் என பலர் நடித்துள்ளார். படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஜப்பான் படம் தீபாவளி ரிலீசாக திரைக்கு வர உள்ளது. முன்னதாக வெளியான படத்தின் டீசரில் இந்திய அளவில் பிரபலமான திருடனாக கார்த்தி, போலீஸூக்கு சவால் விடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் இன்று படத்தின் பிரமாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்த இசை வெளியீட்டு விழாவில் சத்யராஜ், சிபிராஜ், ஜித்தன் ரமேஷ், நந்தா, பொன்வண்ணன், இயக்குனர்கள் சுசீந்திரன், முத்தையா, லோகேஷ் கனகராஜ், பி.எஸ்.மித்ரன், ஹெச்.வினோத், பா. ரஞ்சித் என பலர் பங்கேற்றனர்.
இசை வெளியீட்டு விழாவில் இன்று இரவு 10 மணிக்கு ஜப்பான் படத்தின் டிரெய்லர் வெளியானது. குட்டி மீன் திமிங்கலமாகும் கதை, 200 கோடி ரூபாய் பொருளைத் தூக்கும் திருடன், கேரளா பார்டரில் சுற்றுவது என ஜப்பான் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். மேலும் போலீஸ், அமைச்சர் என அனைவரையும் அலைய விடுவதாகவும் ராஜூ முருகனின் வழக்கமான சமூக பொறுப்புடனும் இந்த ட்ரெய்லர் அமைந்து கவனமீர்த்துள்ளது.
பருத்தி வீரனில் அறிமுகமான கார்த்தி பையா, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, விருமன், கைதி, சிறுத்தை படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்ததுடன், பொன்னியின் செல்வனில் வந்தியதேவனாக நடித்து அசத்தி இருந்தார். சினிமாவில் அறிமுகமான 20 ஆண்டுகளில் 25 படங்களை நடித்திருப்பதாக கார்த்தி நெகிழ்ச்சியும் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: Japan Audio Launch: கார்த்தியில் ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ்.. அதிர்ந்த அரங்கம்!