இயக்குநர் பா.ரஞ்சித் இந்த உலகம் பற்றிய தன் கண்ணை திறந்ததாக ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி தெரிவித்தார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜப்பான்”. இந்த படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், வாகை சந்திரசேகர், சுனில் வர்மா, விஜய் மில்டன், கே.எஸ்.ரவிகுமார், பவா செல்லத்துரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளி வெளியீடாக தியேட்டரில் வெளியாக உள்ளது. ஜப்பான் படம் கார்த்தியின் 25வது படமாகும். இதனிடையே படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று (அக்டோபர் 28) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சூர்யா, தமன்னா, சத்யராஜ், சிபிராஜ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா, ஹெச்.வினோத், சுசீந்திரன், பா.ரஞ்சித், பி.எஸ்.மித்ரன், முத்தையா உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நடிகர் சூர்யா டிரெய்லரை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், கார்த்தியை வைத்து தான் இயக்கிய மெட்ராஸ் படத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, “ரொம்ப சந்தோஷமாக இருக்கு. மெட்ராஸ் படத்தின் கதை நிறைய பேர் கேட்டு நடிக்க மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க. அப்ப தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கார்த்தி கிட்ட கதை படிக்க கொடுக்கலாம்ன்னு சொன்னாரு. அப்புறம் ஒருநாள் கோவையில் இருந்து கார்த்தி கூப்பிடுறாரு, உடனே போய் பார்க்கணும்ன்னு சொல்லி போனோம். அவர் மெட்ராஸ் படம் நானே பண்றேன் சொன்னாரு. அட்டகத்தி படத்துல தினேஷை வச்சு எனக்கு தேவையான ஒன்றை நான் எடுத்துட்டேன்.
ஆனால் நான் முதல் முறையாக கார்த்தி மாறி ஒரு ஹீரோ கூட படம் பண்ண போறேன்னு நினைக்கிறப்ப ரொம்ப யோசனை இருந்துச்சு. அதற்கு காரணம் அந்த படத்துக்கு முன்னாடி அவர் கமர்ஷியலாக நிறைய படம் பண்ணியிருந்தாரு. ஆனால் மெட்ராஸ் படம் ஹிட்டாகி மிகப்பெரிய விவாதத்தை உண்டாக்கியது. நான் மெட்ராஸ் படம் இயக்குவதற்கு முன்னாடி வெளிப்படையாக கார்த்தி, தயாரிப்பாளர்கள் கிட்ட, " நான் தலித் சினிமா தான் எடுக்கப் போறேன். இதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்" என தெரிவித்து தான் எடுத்தேன் என சொன்னார்.
தொடர்ந்து பேசிய கார்த்தி, " நம்மிடையே வட சென்னை மக்கள் பற்றிய ஒரு பார்வை இங்க இருக்கு. மெட்ராஸ் படத்தின் கேரக்டர் நான் பண்ணா செட்டாகுமா என கேட்டேன். நீங்க பண்ணா வடசென்னை மக்கள் மீதான பார்வை மாறும்ன்னு ரஞ்சித் சொன்னாரு. அப்புறம் வடசென்னை ஏரியாவுக்கு அவரோட போய் பார்த்த பிறகு தான் எல்லாம் புரிஞ்சுது. என்னோட கண்ணை திறந்து விட்டதே பா. ரஞ்சித் தான். சமூக நீதின்னு வார்த்தையை நான் அங்கே தான் அவர் மூலமாக தான் தெரிஞ்சிக்கிட்டேன்" என கார்த்தி கூறினார். இதனைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி பாராட்டினர்.