தமிழ் சினிமாவில் இன்று கதாநாயகர்களாக நடிப்பவர்கள் கட்டுமஸ்தான உடல் அமைப்பும், ஆஜானுபாகுவான தோற்றமும் கொண்டவர்களாக தங்களை மாற்றிக் கொள்கின்றனர். இந்த போக்கு இன்றைய தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது.
சுப்ரீம் ஸ்டாருக்கு பிறந்தநாள்:
ஆனால், திரை உலகிற்கு நடிக்க வந்தது முதல் தற்போது வரை தனது உடலை கட்டுக்கோப்பாகவும், கட்டுமஸ்தாகவும் வைத்திருக்கும் ஒரு நடிகர் சரத்குமார். ஆஜானுபாகுவான தோற்றம் மட்டுமின்றி சிறந்த நடிப்பு, நல்ல கதைத்தேர்வுகள் மூலமாகவும் வெற்றிகரமான கதாநாயகனாகவும், நடிகராகவும் உலா வருபவர் சரத்குமார். அவருக்கு இன்று 70வது பிறந்தநாள் ஆகும். இவரது தோற்றத்திற்காக இவரை சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையான ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்த சரத்குமார் தொடக்கத்தில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலுமே நடித்தே வந்தார். 1988ம் ஆண்டு கண் சிமிட்டும் நேரம் என்ற படம் மூலமாக சரத்குமார் அறிமுகமானார். அடுத்தாண்டே புலன் விசாரணை என்ற படத்தில் நடித்து பிரபல வில்லனாக அவதாரம் எடுத்தார்.
ஆனந்தராஜூடன் இணைந்து கதாநாயகனாக அறிமுகம்:
சேலம் விஷ்ணு, புதுப்பாடகன், சீதா, சந்தன காற்று, மௌனம் சம்மதம், வேலை கிடைச்சாச்சு, புரியாத புதிர், எங்கிட்ட மோதாதே என தொடர்ந்து பல படங்களில் குணச்சித்த கதாபாத்திரத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். கதாநாயகன் ஆவதற்கான தோற்றம் அவருக்கு இருந்தும் சுமார் 2 ஆண்டுகள் 13 படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களிலே நடித்து வந்தார்.
அப்போதுதான் முதன்முறையாக இரட்டை கதாநாயகர்கள் கொண்ட திரைப்படமாக உருவான பாலைவன பறவைகள் படத்தில் சரத்குமாரும், ஆனந்தராஜூம் இரண்டு கதாநாயகர்களாக நடித்தனர். இந்த படம் ஓரளவு வெற்றியைப் பெற்றது. ஆனாலும், அடுத்தடுத்து பிரபு படங்களில் வில்லனாகவே நடித்தார் சரத்குமார். இதன்பின்பு, முதன்முறையாக தனி கதாநாயகனாக தங்கமான தங்கச்சி என்ற படத்தில் நடித்தார்.
வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம்:
ஆனால், அந்த படம் அவருக்கு பெரியளவில் வெற்றியைத் தராத காரணத்தால் மீண்டும் சத்யராஜின் புது மனிதன் படத்திலும், விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படத்திலும் வழக்கம்போல வில்லன், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். கேப்டன் பிரபாகரன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக காட்டப்பட்டிருந்த சரத்குமார் அடுத்த படமான காவல் நிலையம் மூலமாக மீண்டும் கதாநாயகன் பாதைக்கு திரும்பினார்.
வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், ஹீரோ என்று மாறி, மாறிப் பயணித்து தடுமாறிக் கொண்டிருந்த சரத்குமாருக்கு ஹீரோவாக நிலையான அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த திரைப்படம் சேரன் பாண்டியன். இந்த படத்தில் அண்ணன் – தம்பி கதையில் விஜயகுமார் – சரத்குமார் நடித்தனர். இந்த படம் அவருக்கு வெற்றியைத் தந்தது. அவருடைய கட்டுமஸ்தான தோற்றமும், ஆஜானுபாகுவான உடலும் அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது.
சூரியனில் தொடங்கிய வெற்றிப்பயணம்:
அதன்பின்பு, சரத்குமாரை தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்ற திரைப்படமாக சூரியன் அமைந்தது. 1992ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியான இந்த படம் சரத்குமார் திரை வாழ்க்கையில் முதல் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து வந்த எல்லைச்சாமி படமும் வெற்றிப்படமாக அமைந்தது. நகர்ப்புறம், கிராமப்புறம், காவல் அதிகாரி என மாறி, மாறி கதாநாயகனாக நடித்து வந்த சரத்குமாருக்கு 1994ம் ஆண்டு மற்றொரு வெற்றி ஆண்டாக அமைந்தது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக சரத்குமாருக்கு அமைந்தது. அந்த படம் அவரின் புகழை கிராமப்புறங்களில் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. வேலுச்சாமி, கூலி, நாடோடி மன்னன், ரகசிய போலீஸ் , மகாபிரபு, நேதாஜி என வெற்றி, சுமாரான வெற்றி, தோல்வி என கலவையான படங்களை அளித்து வந்தார்.
ப்ளாக்பஸ்டர் வெற்றி தந்த சூர்யவம்சம்:
1997ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான சூர்யவம்சம் சரத்குமாரின் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. படத்தில் இடம்பெற்ற காமெடி, பாடல்கள், திரைக்கதை படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியது. அடுத்து வந்த மூவேந்தர், நட்புக்காக, சிம்மராசி சரத்குமாரின் மார்க்கெட்டை இன்னும் உயர்த்தியது.
ஆக்ஷன், காமெடி, நடிப்பு என அனைத்தும் கலந்த கலவையான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த சரத்குமாருக்கு பாட்டாளி, மாயி, சமுத்திரம், தென்காசிப்பட்டனம், அரசு, ஐயா படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. 2010ம் ஆண்டு வெளியான ஜக்குபாய் படமே அவர் முழு நீள கதாநாயகனாக நடித்த திரைப்படம்.
கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம்:
அதன்பின்பு, அவர் முக்கிய கதாபாத்திரம், போலீஸ் அதிகாரி போன்ற கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். காஞ்சனா படத்தில் அவர் நடித்த திருநங்கை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலம் மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நிமிர்ந்து நில், சென்னையில் ஒருநாள், சென்னையில் ஒருநாள் 2, வானம் கொட்டட்டும், பொன்னியின் செல்வன், போர்த் தொழில், பரம்பொருள், ஹிட் லிஸ்ட் என அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
இன்னும் ஆக்ஷன் ஹீரோவிற்கான தோற்றத்தில் காட்சி தரும் சரத்குமார் இன்னும் பல படங்களில் நடிக்க வாழ்த்துகள்.