தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த், சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகிறது.
நாளை மறுநாள் வேட்டையன் பாடல்:
வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், அமிதாப்பச்சன், பகத் ஃபாசில், மஞ்சுவாரியர் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். இது படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் நாளை மறுநாள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேட்டையன் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்தின் பேட்ட, தர்பார் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களுக்கும் அனிருத் இசையமைத்திருப்பார். அந்த படங்களின் இசை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
ஆயுத பூஜை ரிலீஸ்:
அதேபோல, வேட்டையன் படத்தின் இசையும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்டையன் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வரும் அக்டோபர் 10ம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளது.
ஜெய்பீம் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ள ஞானவேல் இந்த படத்தை இயக்கியிருப்பது படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்துள்ளார். அமிதாப்பச்சன் மூத்த வழக்கறிஞராக நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்பீம் படத்தைப் போல வேட்டையன் படமும் அழுத்தமான கதைக்களத்தில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வேட்டையன் படம் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள அதே தருணத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சத்யராஜ், நாகர்ஜூனா, உபேந்திரா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.