காலா திரைப்படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முழுவதும் கறுப்பு நிற உடையில் உள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கனவுத் திரைப்படங்களில் ஒன்று பாபா. இந்த திரைப்படம் சமீபத்தில் புதிய டெக்னாலஜியுடன்  ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் இந்த படம் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலைக் குவித்தது. 


பாபா ரீ ரிலீஸ்:


 கடந்த 2002 ஆம் ஆண்டு  இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா 4வது முறையாக ரஜினியை வைத்து இயக்கிய படம் “பாபா”. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினியே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார். படம் ரிலீசான சமயத்தில் ஏற்பட்ட பெரும் பிரச்சனைகளை அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகம் கூட அவ்வளவு எளிதில் இன்றளவும் மறந்திருக்காது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பாபா படம் படுதோல்வி அடைந்தது. 


ஹீரோயினாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் பாபா படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அதேசமயம் சமீபகாலமாக மீண்டும் ஆன்மீக ரீதியான படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருவதால் பாபா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய ரஜினி முடிவெடுத்திருந்தார்.


ரீ எடிட் - 5 மந்திரங்கள்:






அதன்படி பாபா படம் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வெளியானது. காலை 4 மணிக்கு முதல் காட்சி என அமர்க்களமாக தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது. ரஜினியின் அறிமுக காட்சியே இல்லாமல் நேரடியாக பாடலுக்கு சென்றது. ஆங்காங்கே சில காட்சிகளை நீக்கியது என ரீ-எடிட் ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. நீளம் கருதி இது செய்யப்பட்டிருந்தாலும் நீக்காமலே இருந்திருக்கலாம் என பலரும் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இதேபோல பாபா படத்தில் 7 மந்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ரீ-ரிலீஸ் படத்தில் 5 மந்திரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பட்டம் தன் கைக்கு கிடைக்க வேண்டும் என வேண்டும் 2 மந்திரங்களும், ரூ.10 லட்சம் கிடைக்க வேண்டும் என்ற மந்திரமும், தான் இருக்கும் பகுதி அனைத்து வசதிகளுடன் மாற வேண்டும் என்ற மந்திரமும், தன் அம்மாவுக்காக ஒரு மந்திரம் என 5 மந்திரங்களையே உபயோகிப்பார். 


ரம்யா கிருஷ்ணன் காட்சி நீக்கம்:


படத்தில் சிறப்பு தோற்றத்தில் படையப்பா நீலாம்பரியாக வரும் ரம்யா கிருஷ்ணன் ரஜினியிடம் டைம் கேட்கும் காட்சியும், ஜப்பான் பெண் ஒருவருக்கு ரஜினி உதவுவதற்காக பயன்படுத்தும் மந்திரம் தொடர்பான காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாடல்களிலும் ஆங்காங்கே எடிட் செய்யப்பட்டுள்ளது. கிளைமேக்ஸ் காட்சி மொத்தமாக மாற்றப்பட்டு பாபாவுக்கு மீண்டும் மறுஜென்மம் வழங்கும் வசனங்களும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் பழைய ரஜினியை தியேட்டரில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வுகளை சொல்ல வார்த்தைகளே இல்லை என ரசிகர்கள் தெரிவித்து இந்த படத்தினை கொண்டாடினர் எனலாம். 


பாபா படத்தின் ரீ ரிலீஸ் வெற்றி அடைந்ததையொட்டி படக்குழுவுடன் வெற்றியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாடினார்.  இதில் படத்தின் இயக்குநர் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.