ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த 2 படங்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர” படத்தில் முழுவீச்சில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோரும் நடித்து வருவதால் படம் குறித்து எதிர்பார்ப்பு இப்போதே எகிற தொடங்கியுள்ளது.


இதனிடையே ரஜினி கேசுவலாக உட்கார்ந்து ஸ்மார்ட்போனை உபயோகித்துக் கொண்டிருக்கும் போட்டோவை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா  தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் நேற்றைய தினம் பகிர்ந்திருந்தார். அதில் “விஜயதசமி வாழ்த்துக்களுடன்... தேவையான, தவறு எதுவும் இல்லாத, குறையற்ற தந்தை அன்பு” என தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.






மேலும் ஜெயிலர் படம் 2023 ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினி 170 படங்களோடு நடிப்பை நிறுத்திக் கொள்வார் என்ற தகவலெல்லாம் வெளியானது. இதில் கடைசி படத்தை அவரது இரு மகள்களும் இணைந்து இயக்குவார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்பது போல ரஜினி எனர்ஜெட்டிக்காக ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாகவும், அந்த இரண்டு படங்களை லைகா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன் தயாரிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் ஒரு படத்தை டான்" பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும், இன்னொரு படத்தை ரஜினியின்  மூத்த மகள் ஐஸ்வர்யாவும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.






ஏற்கனவே லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 2.0., தர்பார் ஆகிய படங்கள் வெளியான நிலையில் காலா படத்தை தியேட்டர் உரிமையை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.