பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர்கான் நடித்த படம் லால்சிங் சத்தா. கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியான இப்படம், ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் நேற்று வெளியானது.
அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா:
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேன்க்ஸின் நடிபில் 1994 ஆம் ஆண்டு வெளியான படம் ஃபாரஸ்ட் கம்ப். ஹாலிவுட் திரையுலகின் க்ளாசிக் படங்களுள் ஒன்று என புகழப்படும் இப்படம், பல விருதுகளை வென்றுள்ளது. ஃபாரஸ்ட் கம்ப் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் லால் சிங் சத்தா. ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் தழுவல் என்றாலும், இந்திய மக்களுக்கேற்ப திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. இப்படத்தை ஆத்விக் சந்தன் இயக்கியிருந்தார்.
சிறு வயது முதலே குழந்தைத்தனமான குணாதிசியம் கொண்ட லால் என்ற இளைஞனைப் பற்றியும், அவனைச் சுற்றி நடக்கும் கதையுமே லால் சிங் சத்தா. இதில், அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்திருந்தார். நல்ல ஸ்டோரி லைனை கொண்ட படமாக இருந்தாலும், மெதுவான திரைக்கதையாலும், சொல்ல வந்த விஷயத்தை அழுத்தமாக சொல்லாததினாலும், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. விமர்சனமும், வசூலும் கூட சறுக்கலையே சந்தித்தது. இதனால், ரிலீஸான 2 வாரங்களிலேயே படத்திற்கு வரும் மக்கள் கூட்டம் குறைந்து போனது.
நெட்ஃப்ளிக்ஸில் லால் சிங் சத்தா
லால்சிங் சத்தா திரைப்படம் 6 மாத காலங்களுக்குள் ஓடிடி தளதில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் ரிலீஸான 8 வாரங்களிலேயே இப்படத்தின் உரிமத்தை ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் வாங்கிவிட்டது.
இதையடுத்து, இப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிப்புகளும் வந்த வண்ணம் இருந்தது. இறுதியில், அக்டோபர் 5ஆம் தேதியான நேற்று இப்படம் வெளியானது. இதனை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் காணலாம் என நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.
தியேட்ரிக்கள் ரிலீஸின் போது இப்படத்தை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள், வீட்டில் உட்கார்ந்து ரிலாக்ஸாக இப்படத்தைப் பார்க்கும் போது கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் படம் வெளியாவதால், தென்னிந்திய ரசிகர்களும் இந்த படம் நிச்சயமாக பிடிக்கும் என திரையுலக வட்டாரங்களில் பேச்சு அடிபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.