சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இந்த படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறி கிடக்குறது. அண்ணாத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்து வருகிறார். அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும் முறை பெண்ணாக குஷ்புவும் சகோதரியாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்களை தவிர பிரகாஷ் ராஜ் ,சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். அண்ணாத்த படம் கடந்த பொங்கல் பண்டிகை அன்று திரையிட படக்குழு முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரோனா சூழல் காரணமாக படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை. இந்நிலையில் படத்தை வருகிற தீபாவளி பண்டிகை அன்று படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குநர் சிவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் குறும்பாக போஸ் கொடுத்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க நேற்று படத்தின் இயக்குநர் சிவா தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்திற்கே சென்ற ரஜினி, சிவாவை வாழ்த்தி, கேக் ஊட்டும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கொல்கத்தா மற்றும் லக்னோவில் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜின் காட்சிகளை படமாக்கும் பணிகள் லக்னோவில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களின் புனிதத் தலமான இமாம்பாடாவில் தொடங்கியுள்ளது. ரஜினி ஏற்கனவே தனது போர்ஷன் காட்சிகளை முடித்துக்கொடுத்துவிட்டதால் தற்போது நடக்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால் ரஜினி படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருப்பதாக நினைத்து அவரது ரசிகர்கள் அங்கே குவிந்துவிட்டனர்.
கூட்டத்தை கண்டு அதிர்ச்சியடைந்த ஷியா பிரிவு முஸ்லிம்கள் , கொரோனா சூழலில் இப்படி கூட்டம் கூடுவதா என கண்டித்து, படப்பிடிப்பை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு , தற்போது மீண்டும் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடிக்க முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார்களாம்.