நடிகர் ரஜினிகாந்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.


நடிகர் ரஜினிகாந்திற்கு விருதுகள் புதிதல்ல. ஃபிலிம் பேர், கலைமாமணி தொடங்கி  தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் அவருக்கு இன்று இன்னொரு விருது வழங்கப்பட்டிருக்கிறது. அந்த விருது தமிழகத்தில் அதிகப்படியான வரி செலுத்தியதற்காக வழங்கப்பட்ட  தெஸ்பியன் விருது ஆகும். 






வருமான வரி தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், அது தொடர்பான நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது. புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பங்கேற்றார். ரஜினிகாந்த் சார்பில் அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா விருதை பெற்றுக்கொண்டார். வழக்கமாக வரி செலுத்தியவர்களும் இந்த நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்டார்கள். 


அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. ரஜினிகாந்தின் 169 ஆவது படமான இதை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவது அனைவரும் அறிந்ததே. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.


 ‘பீஸ்ட்’ -ன் படுதோல்விக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் நெல்சனுக்கு இதில் வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற பிரஷ்ஷர். அதனால் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைத்து வருகிறார் நெல்சன். 


 






ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்காமோகன், ரம்யா கிருஷ்ணன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளாமே நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும், பிரியங்கா மோகன் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


முன்னதாக மேடை ஒன்றில் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம் நெல்சன் கூறியிருந்தார். இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு முந்தைய வேலைகள் கிட்டத்தட்ட முழுமையாக முடிந்து விட்டதாம். வருகிற ஆக்ஸ்ட் 3 ஆம் தேதி படத்தின் பூஜையை படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.