இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைத்தது. படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிக்கு புதிய கார்களை பரிசாக வழங்கினார்.   இப்படத்தில் விநாயகா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், வசந்த் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன் லால் கெளரவ தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஜெயிலர் 2 

கூலி படத்தில் பிசியாக இருக்கும்போதே ரஜினி ஜெயிலர் 2 படத்தில் நடிக்க கமிட் ஆனார். இப்படத்தின் புரோமோ வீடியோவும் ரசிகர்களை கவர்ந்தது. ஜெயிலர் படத்தில் அனிருத்தின் இசை மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதே வெற்றிக் கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜெயிலர் படத்தை போன்றே இப்படத்தில் மல்டி ஸ்டார் ரேஞ்சில் உருவாகி வருகிறது. இப்படத்திலும் தெலுங்கு நடிகர் பாலையா, மலையாள நடிகர் பஹத் பாசில், மோகன் லாலும் இணைந்துள்ளனர். இப்படத்தில் பாலையாவிற்கு பெரும் தொகையை கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

சிலை கடத்தல் 

இயக்குநர் நெல்சன் இயக்கும் படங்களில் வித்தியாசமான முறையில் பிளாக் காமெடி வகை படங்களை இயக்கி வருகிறார். இதில், பிரதானமாக இருப்பது குகைன், போதை மருந்து கடத்தல் போன்ற சம்பவங்களை வைத்து எடுப்பதில் ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார். ஜெயிலர் படத்தில் விநாயகா சட்டவிரோதமாக சிலை கடத்தல் தொழிலை செய்யும் வில்லனாக நடித்திருந்தார். அதேபோன்று ஜெயிலர் 2 படத்திலும் அதன் தொடர்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு அடுத்ததாக கேரளாவில் நடைபெற்று முடிந்தது. படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தை நேரில் பார்த்த ரசிகர்கள் சிலர், கையில் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி எடுத்தது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ஒரு ரசிகர், கற்பூரத்தை ஏந்தி, தெய்வமே என்று கூறியபடி ரஜினிக்கு ஆரத்தி எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

மைசூரில் திரண்ட ரசிகர்கள்

ஜெயிலர் 2 படத்தில் படு பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் கேரளா, ஹைதராபாத் என பறந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது. இன்று படப்பிடிப்பு தளத்திற்கு வந்த ரஜினியை அப்பகுதி மக்கள் கடலென திரண்டு வரவேற்பு அளித்தனர். ரஜினிகாந்த் காரில் வரும்போது ரசிகர்களை பார்த்து கை காட்டி அன்பை வெளிப்படுத்தினார். அப்போது ரசிகர்கள் தலைவா தலைவா என்று கத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.