கடந்த 12-ம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு 270 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் பரவிவந்த நிலையில், அதில் லேட்டஸ்டாக, விமானியின் இருக்கையில் இருந்த தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்கு காரணம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், மத்திய அரசு அதற்கு விளக்கமளித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய தகவல் என்ன.?
ஏர் இந்தியா விமான விபத்திற்கு, விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
அந்த செய்தியில், விமானம் ஓடுதளத்தில் இருந்து டேக் ஆஃப் ஆகி, விண்ணை நோக்கி பறக்கத் தொடங்கியதும், விமானியின் இருக்கை லாக் ஆகாமல், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதனால், விமானியின் இருக்கை பின்னோக்கி வேகமாக நகர்ந்து சென்றதால், விமானியால் கட்டுப்பாட்டுக் கருவியை கட்டுப்படுத்த முடியாமல், அதை பின்னோக்கி இழுத்துவிட்டதாகவும், அதனால் விமானம் நடுவானில் பறக்கும்போது, சமநிலையில் ஒரே சீராக பறக்க வைக்கும் ஐடியல் மோடிற்கு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
விமானம் டேக் ஆஃப் ஆகி சில நொடிகளிலேயே ஐடியல் நிலையை அடைந்ததால், என்ஜினின் வேகம் உடனடியாக குறைந்ததையடுத்து, சக விமானி, விமானம் பறப்பதை கட்டுப்படுத்தும் கருவியை தனது கன்ட்ரோலில் எடுக்க முயன்று அதில் தோல்வியைத் தழுவியதால், அடுத்த நில நொடிகளுக்குள் விமானம் மருத்துவக் கல்லூரியின் கட்டிடத்தின் மீது விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமானியின் அறையில், விமானியும், சக விமானியும் பேசிய உரையாடல், கருப்புப் பெட்டியில் பதிவாகியிருப்பதாகவும் அந்த சமூக வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு என்ன கூறியுள்ளது.?
இந்த தகவல் வேகமாக பரவி, பலரும் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
இது குறித்து, மத்திய அரசின் பத்திரிகை தவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், இந்த தகவல் தவறானது என்றும், இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து
கடந்த 12-ம் தேதி, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே விமான நிலைய வளாகத்திற்கு அருகே இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் விமானம் வெடித்துச் சிதறிய நிலையில், தீயில் கருகி விமானத்தில் இருந்த 242 பேரில், 241 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், விடுதியில் இருந்த மாணவர்கள் பலரும் உயிரிழந்தனர். மொத்தமாக 274 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தின் கருப்புப் பெட்டி சேதமடைந்த நிலையில், அதிலிருக்கும் தரவுகளை எடுக்க, அது அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், சமூக வலைதளங்களில் பல்வேறு பொய்யான தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.