‛தீர்க்காசுயா இரு...’ என்கிற வசனத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. முண்டாசுபட்டியில் சாமியாராக வந்து, ஜெய்பீம் போலீஸ் வரை கலக்கு கலக்கு என்று காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணி, எத்தனை படங்களில் பணியாற்றியிருக்கிறார் என்று தெரியுமா? ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட சூப்பர் குட் ப்லிம்ஸின் ஆஸ்தான உதவி இயக்குனர் என்கிற அடைமொழியோடு வரும் அவரின் கடந்த காலத்தை கேட்டுப்பாருங்கள்...


’’நான் உதவி இயக்குனராக பல இடங்களில் வேலை செய்திருக்கிறேன்.  சூப்பர் குட் ப்லிம்ஸ் நிறுவனத்தில் உதவி இயக்குனராக நிறைய படங்களுக்கு வேலை செய்திருக்கிறேன். ஆர்.பி.செளத்ரி சாரை சந்தித்து, ஒரு கதையை கூறினேன். ‛என்னய்யா வந்துமே இவ்வளவு பெரிய கதை சொல்றீயே... சின்ன பட்ஜெட்ல கதை சொல்லுயானு...’ சொன்னாரு. கதை அவருக்கு பிடிச்சதால, இரண்டு மொழிகளில் இதை பண்ணலாம்னு சொன்னாரு. ‛அது வரை நீ பயிற்சி எடு... ஆர்ட்டிஸ்ட் உனக்கு அனுப்பி வைக்கிறேன்னு...’ சொன்னாரு. அது ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் சம்மந்தப்பட்ட கதை. இதயமாற்று அறுவை சிகிச்சை தொடர்பான கதை. அந்த கதை தெரியாத நடிகர்களே இல்லை.




ரஜினி சார், கமல் சார், அஜித் சார், விஜய் சார், சரத்குமார் சார்னு தமிழ் சினிமாவில் எல்லாரும் கேட்ட கதை அது. தமிழை கடந்து தெலுங்கிலும் போன கதை. படமா ஆகியும், முடியாத கதையா போச்சு. அவ்வளவு படத்தில் உதவி இயக்குனரா இருந்தும், என்னோட படத்தை என்னால டைரக்ட் பண்ண முடியாம போச்சு. சிட்டிசன் படத்திற்கு நான் தான், இணை இயக்குனர். பவித்ரன் சாரின் திருமூர்த்தி படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இன்டஸ்ட்ரியில் உள்ள பெரிய இயக்குனர்கள், பெரிய ஹீரோக்கள் எல்லோரிடமும் வேலை பார்த்திருக்கேன். பெரிய ஆட்களுடன் இருந்ததால், எனது கதையும் பெரிதாகவே இருந்தது. 


ஆர்.பி.செளத்ரி சார் திட்டுவாரு... ‛எப்போதும்... சின்ன கதையா சொல்லி, மெதுவாய் போய்யா... பெரிய பட்ஜட் கதையா கட்டி அழாதே,’னுசொல்வாரு. ஆனால், நமக்கு அது ஏறவே இல்லை. கலைஞருடன் பெண் சிங்கம் படத்தில் பணியாற்றினேன். நிறைய இணைந்து பணியாற்றியிருந்தாலும், தனியாக இயக்குனராக பலமுறை முயற்சித்திருக்கிறேன். எல்லாரும் எல்லாமும் எளிதாய் கிடைப்பதில்லை. அதெல்லாம் அமையுறதை பொருத்தது. சில இடங்களில் தவறுதலா சிக்கி, தவறான ஒப்பந்தம் போட்டு, அவங்களும் கதை பண்ணாமல், நாமும் கதை பண்ண முடியாமல் சிக்கி தவிச்சது உண்டு. அந்த மாதிரி சீரழிஞ்சதுல நானும் ஒருத்தன். 


காலத்தை வென்றவர்களை போன்று, காலத்தில் தோற்றவன் நான். ஆனாலும் முயன்று கொண்டே இருக்கிறேன். கஷ்டத்தில் உதவியவர்கள் சிலர்; சிரமப்படுத்தியவர்கள் பலர். ஒரு கதை ரெடி பண்ணி சிரஞ்சிவி சாரிடம் கொண்டு சென்றேன். அவர் கதையை மட்டும் கேட்டார். பிழைக்கத் தெரியாதவனாக, மறுத்துவிட்டேன். பின்னர் அதே கதையை விஜய்க்கு சொல்ல எஸ்ஏசி சாரிடம் கூறினேன். எல்லாம் ஓகே என ஆகும் போது, 6 மாதம் கழித்து எஸ்ஏசி சார் கூப்பிட்டார். ‛என்னப்பா உன் கதை, அப்படியே தெலுங்கில் விக்ரமக்குடுனு ஒரு படம் வந்திருக்கு...’ என்றார். அது தான் தமிழில் அப்புறம் சிறுத்தைனு வந்துச்சு. அந்த கதையும் போச்சு. 




விஜயிடம் ஒரு நாள் எனது ஆம்புலன்ஸ் டிரைவர் கதையை சொன்னேன். சூட்டிங் ஸ்பார்ட்டில் கதை சொன்னேன். ஒருநாள் ஞாயிற்று கிழமை நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது, விஜய் போன் செய்து அழைத்தார். விஜய்க்கு கதை பிடித்தது, ஆனால், கொஞ்சம் லேட் ஆகட்டும் என்றார். சிட்டிசன் சூட்டிங் அப்போ, அஜித் சாரிடம் இந்த கதை கேட்டு, அவரே பல கம்பெனிகளுக்கு என்னை அனுப்பி வைத்தார்.  புதுமுக இயக்குனர்கள் படம் தோல்வியடைந்ததால், அந்த வாய்ப்பு எனக்கு பறிபோனது. 


சில நாள் கழித்து, என்னுடைய இருதய அறுவை சிகிச்சை கதை, தமிழில் இன்னொரு பெரிய இயக்குனர் பெயரில் வெளியானது. பெரிய ஹீரோவின் தந்தை வேறு அவர். ‛என்ன... எல்லாரும்  உன் கதையை நான் செய்ததாக எல்லோரும் கூறுகிறார்கள், கதையை சொல்லு,’ என்று என்னிடமே அவர் கேட்டார். அவரிடம் ஏற்கனவே இரண்டு முறை அந்த கதையை கூறியிருந்தேன். அதற்கு மேல் என்ன செய்யுறது. பெரிய மனிதர்களிடம் அதற்கு மேல் என்ன பேசுவது. 


நான் படம் பண்ணியிருந்தால், கே.எஸ்.ரவிக்குமார், ஹரி மாதிரி பெரிய கமர்ஷியல் இயக்குனராக ஆகியிருப்பேன். ஏன் என்றால், கதை சொன்ன ஹீரோக்கள் எல்லாம் அவ்வளவு பெரிய ஹீரோக்கள். ஆனால், படம் பண்ணவே முடியாமல் போனது. நான் நடிகனாக முயற்சிக்கவில்லை; அதுவாகவே நடந்தது. முண்டாசுப்பட்டி தான் எனக்கு பெரிய மைல்கல்லாக இருந்தது. இன்று வெளியில் போனாலும் முண்டாசுபட்டி சாமியார் என்று தான் அழைக்கிறார்கள். 


அதற்கு பின் என்னை பிரபலமாக்கியது ஜெய்பீம் போலீஸ் கேரக்டர் தான். ஜெய்பீம் கொடுத்த வெற்றி, எனக்கு பெரிய வெற்றி. கதை கேட்கும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. என்ன கதையா இருந்தாலும், அவர்கள் சொல்வதை கேட்டு நடிப்பேன். அப்படி தான் ஜெய்பீம் போனேன். போலீஸ் கதாபாத்திரம் என்றார்கள், அப்போ நிறைய போலீஸ் பாத்திரத்தில் நடித்தேன். என்னடா ஒரே போலீஸ் பாத்திரத்தில் நடிக்கணுமானு தோணுச்சு. நாங்க சூட்டிங் தொடங்கும் போது அது ரொம்ப சின்ன படமா தான் எடுத்தாங்க. இரண்டு வருசத்துக்கு அப்புறம் அது பெரிய படமா மாறிடுச்சு. சூர்யா சார் அப்புறம் தான் வந்தாரு. 


சினிமாவில் ரொம்ப விஸ்வசமானவனா இருந்துட்டேன். கண் முன்னாடியே நிறைய பேர் ஏமாத்தியிருக்காங்க. தெரிஞ்சும் நான் ஏமாந்திருக்கேன். நல்லவனா இருந்து நிறையா இழந்துட்டேன். அப்புறம், படத்திலயாவது நெகட்டிவ் ரோல்ல நடிக்கணும்னு தான் ஜெய்பீம் மாதிரி படத்தில் நடித்தேன். டப்பிங் போகும் போது தான், படத்தோட பிரம்மாண்டம் தெரிஞ்சது. டப்பிங்கில் இயக்குனர் காலில் விழுந்துட்டேன். ‛என்னெண்ணே... காலில் விழுறீங்க...’ என ஞானவேல் கேட்டார். எனக்கு நல்ல படம் தர்றீங்க... நன்றினு சொன்னேன்,’’


என்று, இணைதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.