சுந்தர் சி


சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் அரண்மனை 4ஆம் பாகம் வெளியானது. இந்த ஆண்டு மற்ற தமிழ் படங்கள் வசூல் எடுக்கத் திணறியபோது அரண்மனை படம் ரூ.100 கோடிகள் வசூலித்து இந்த ஆண்டின் முதல் பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி பெற்றது. அரண்மனை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் மத கஜ ராஜா திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மத கஜ ராஜா


2012ஆம் ஆண்டு ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் மற்றும் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து “மத கஜ ராஜா” என்ற படத்தை அறிவித்து தயாரித்தது. இப்படத்தை சுந்தர் சி இயக்க விஜய் ஆண்டனி இசையமைத்தார். இப்படத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, சோனு சூட், பிரகாஷ்ராஜ் என பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளரின் முந்தைய படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மத கஜ ராஜா படத்தின் ரிலீஸ் நிறுத்தி வைக்கப் பட்டது. இது குறித்து சுந்தர் சி சில மாதங்கள் முன்பு பேசியபோது






”அந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர்களிடம் தான் இந்தக் கேள்வியை கேட்க வேண்டும். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் நானும் விஷாலும் பணம் கொடுத்து அப்படத்தை வாங்கிக் கொள்கிறோம் என கெஞ்சி கேட்டும் தயாரிப்பு நிறுவனம் தர மறுத்து விட்டது. அந்தத் தயாரிப்பாளர் அவரின் முந்தைய படத்தின் கடன் பிரச்சினையால் இப்படத்தை நிறுத்தி வைத்து விட்டார். மத கஜ ராஜா படம் மேல் கடன் இருந்தால் எங்க மேல தப்புன்னு வருத்தப்படலாம். இப்படம் இன்றைக்கும் வசூல் ரீதியாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதனால் தயவு செஞ்சி என் சார்பாக தயாரிப்பாளர்களிடம் நீங்களும் பேசுங்கள்” என்று அவர் பேசியிருந்தார்.


இந்நிலையில், மதகஜ ராஜா திரைப்படம் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சுந்தர்.சியின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் இப்படத்தைப் பார்த்ததாகவும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரண்மனை 4 படத்தின் மிகப்பெரிய வெற்றியே நீண்ட நாள் கிடப்பில் இருந்த இப்படத்தை வெளியிடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.