Agniveer Reservation: அக்னிவீர் பிரிவில் பணியாற்றியவர்களுக்கு, உடல் திறன் தேர்வு மற்றும் அதிகபட்ச வயது வரம்பில் மத்திய அரசு தளர்வு அளிக்கிறது.
அக்னிவீரர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு:
அக்னிவீரர்கள் மற்றும் அக்னிபாத் திட்டம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில், மத்திய ஆயுதப்படையில் கான்ஸ்டபிள் பதவிகளுக்கான 10 சதவிகித பணியிடங்களை, முன்னாள் அக்னிவீரர்களுக்காக ஒதுக்குவதாக உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
சிஐஎஸ்எஃப் தவிர, எல்லைப் பாதுகாப்புப் படைகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படைகளும் முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளன. இதனிடையே, மத்திய அரசு அவர்களுக்கு உடல் திறன் தேர்வு மற்றும் வயது வரம்பில் தளர்வு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகளின் விவரங்கள்:
பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் CISF செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. முதல் பேட்ச்க்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்வு ஐந்து ஆண்டுகள், அதைத் தொடர்ந்து வரவிருக்கும் பேட்ச்சுகளுக்கு தளர்வு மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படும். இது முன்னாள் அக்னிவீரர்கள் சரியான நேரத்தில் இந்த பலனைப் பெற உதவும், அதை நாங்கள் உறுதி செய்வோம் என்று CISF இயக்குநர் ஜெனரல் நினா சிங் கூறினார்.
எல்லை பாதுகாப்பு படை பிரிவிலும் இடஒதுக்கீடு:
எல்லை பாதுகாப்பு படைக்கான ஆட்சேர்ப்பில், முன்னாள் அக்னிவீரர்கள் 10 சதவிகித இடஒதுக்கீடு பெறுவார்கள், என்று எல்லைப் பாதுகாப்புப் படை டைரக்டர் ஜெனரல் நிதின் அகர்வால் தெரிவித்தார். மேலும், இந்த வீரர்கள் தங்களது நான்கு வருட வேலைகள் மூலம் முன் பயிற்சியும் அனுபவமும் பெற்றிருப்பதால், BSF அவர்களுக்கு ஒரு குறுகிய மாற்று பயிற்சியை அளித்து அவர்களை உள்ளூர் குழுவில் நியமிக்கும். பின்னர் அவர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
ரயில்வே பாதுகாப்புப் படையிலும் இடஒதுக்கீடு:
ரயில்வே பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜெனரல் மனோஜ் யாதவா பேசுகையில், “எதிர்காலத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பதவிக்கான அனைத்து ஆட்சேர்ப்புகளிலும், முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு இருக்கும். முன்னாள் அக்னிவீரர்களை வரவேற்க ஆர்பிஎஃப் மிகவும் உற்சாகமாக உள்ளது. இது புதிய வலிமையையும், ஆற்றலையும், படையின் மன உறுதியையும் அதிகரிக்கும்” என தெரிவித்தார்.
தொடரும் குற்றச்சாட்டுகள்:
அக்னிவீர் திட்டம் தொடர்பாக மத்திய அரசை, காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டி வருகிறார்.
அக்னிவீர் திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த அஜய் குமாரின் குடும்பத்திற்கு மத்திய அரசிடம் இருந்து இழப்பீடு எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என்று சாடி வருகிறார். காப்பீடு மட்டுமே கிடைத்துள்ளதாகவும், அரசு தரப்பில் இருந்து இழப்பீடோ அங்கீகாரமோ கிடைக்கவில்லை என ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜம்மு & காஷ்மீரின் நௌஷேராவில் ஜனவரி மாதம் கண்ணிவெடி வெடித்ததில் அஜய் குமார் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.