இலங்கையில் டிவி சேனல் ஒன்றை நடத்தலாம் என நினைத்து ரூ.50 லட்சம் இழந்த சம்பவத்தை நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான விஜய சாரதி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

ஒரு நேர்காணலில் பேசிய விஜயசாரதி, “நான் நிறைய ஏமாந்து இருக்கேன். என்னை எளிதாக ஏமாற்றி விடுகிறார்கள். என்னுடைய சிரிப்புக்கு பின்னால் வலி இருக்கிறது. அதனை மறுக்க முடியாது. நான் இலங்கையில் சக்தி டிவி என்ற சேனலில் தலைமை பொறுப்பில் இருந்தேன். அப்போது கொரோனாவுக்கு 2 ஆண்டுகள் முன்னால் பணியில் இணைந்தேன். அந்த சமயம் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற பாடல் ரியாலிட்டி ஷோவுக்காக இலங்கையில் நான் ஆடிஷன் செய்ய பல்வேறு இடங்களுக்கும் சென்றேன். அந்த நிகழ்ச்சியை ஐபிஎல் போட்டி ஸ்டைலில் 4 இடங்களை மையமாக கொண்டு எடுக்கலாம் என நினைத்திருந்தேன். அந்த நிகழ்ச்சியின் நடுவராக ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரஹைனாவை தேர்வு செய்திருந்தோம். 

முன்கட்ட பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. அதில் பாடக்கூடிய போட்டியாளர்களை தேர்வு செய்யும் பொருட்டு ஆடிஷனுக்காக சென்றிருந்தேன். அதுவரை பத்திரிக்கைகளில் மட்டுமே படித்த இலங்கையின் மட்டகளப்பு, வவுனியா ஆகிய இடங்களை நேரில் சென்று பார்க்க ஆசைப்பட்டேன். அங்கு தங்கியிருந்த சமயத்தில் வீடியோ செய்ய தொடங்கினேன். 

Continues below advertisement

அங்கிருந்த பிரபலமான ஹோட்டல் பற்றி யோசிக்கும்போது எனக்குள் பல நினைவுகள் வந்தது. அதனை அடிப்படையாக வைத்து பல நிகழ்ச்சிகளை உருவாக்கினேன். கொரோனாவுக்குப் பிறகு நாம் ஒரு சேனலை சொந்தமாக நடத்தினால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. இலங்கையைப் பொறுத்தவரை சன் டிவி, விஜய் டிவி நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கிறார்கள். இங்கிருக்கும் தொகுப்பாளர்களை அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. 

ஆனால் இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளர்கள் தமிழ் பேசினால் அங்கு வாழும் மக்கள் டென்ஷன் ஆகி விடுகிறார்கள். இப்படியான நிலையில் சேனல் ஒன்றை நடத்தலாம் என நினைத்து ஒருவரை சந்தித்தேன். அங்கு ஸ்டார் தமிழ் என்ற சேனல் இருந்தது. நவநீதன் என்பவர் தான் எனக்கு உதவினார். 

நான் அந்த கம்பெனியை முழுவதுமாக பெறுவதற்கு முன்பு நவநீதன் என்னை தொடர்பு கொண்டு  ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும். அவர்கள் வசம் இருந்த படங்களை எல்லாம் நாம் பயன்படுத்துகிறோம். அதனால் இந்த பணத்தை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். நான் சேனல் பெயரில் பணம் தருகிறேன் என சொன்னதற்கு, இல்லை சம்பந்தப்பட்ட நபரின் பெயரில் வேண்டும் என கேட்டார். 

நானும் கொடுத்தேன். இன்றைக்கும் அது சம்பந்தமான வழக்கு சென்று கொண்டிருக்கிறது. இலங்கை நிஜமாகவே பாவப்பட்ட ஊர். அங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். ஆனால் அங்கு அடிக்கடி நிகழும் அசம்பாவிதங்கள் கவலையளிக்கக்கூடியவையாக உள்ளது.  நான் போன சமயத்தில் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதன் பின்னர் கொரோனா வந்தது. தொடர்ந்து இலங்கைக்கான சுற்றுலா தடை செய்யப்பட்டது. இதனால் இலங்கைக்குள் நான் வசிப்பதே கடினமாகி போனது. மஞ்சள் தூள் எல்லாம் ரூ.800க்கு வாங்கினேன். எல்லாம் கொஞ்சம் மாறிய பிறகு மக்கள் புரட்சி வெடித்தது. அதனால் போலீசால் நான் கொடுத்த புகாரை விசாரிக்க முடியவில்லை. 

இலங்கையில் அரசு மாறியபோது, நான் எக்ஸ் வலைத்தளப் பதிவில் இலங்கை அதிபர் தொடங்கி அனைத்து அனைவருக்கும் மெயில் பண்ணினேன். அவர்கள் என் விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்” என விஜயசாரதி தெரிவித்துள்ளார்.