உலக சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி தியேட்டரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடல் , சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருவது வழக்கம். 


அந்த வகையில் சிறந்த பாடலுக்கான விருதை எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் கைப்பற்றியது. இந்த பாடலின் படலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கார் விருதுகளை கைப்பற்றினர். சர்வதேச அளவில் இந்திய சினிமாவில் கொண்டு சேர்த்து பெருமைப்படுத்தியது ஆர்.ஆர்.ஆர். படக்குழுவை சேரும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும்  நடிகர் ரஜினிகாந்த், பார்த்திபன் என திரை பிரபலங்கள் பலரும் அவர்களின் வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலம் குவித்து வருகிறார்கள். 


 




அந்த வகையில் பிரபல அரசியல், கிரிக்கெட், சினிமா விமர்சகரான சுமந்த் ராமன் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார். "ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை பெற்றதன் மூலம் நமக்கு ஒரு வாழ்க்கை  பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. நாட்டு நாட்டு பாடல் நிச்சயம் ஒரு கால் தட்டும் கவர்ச்சியான டியூன் கொண்ட ஒரு அற்புதமான பாடலே. அதை நான் அப்படித்தான் பார்க்கிறேன். அருமையான அசாதாரணமான பாடல் தான் என்றாலும் அது எப்படி சினிமாவின் மிக உயரிய விருதை கைப்பற்றியது ? ப்ரோமோஷன் தான் அதற்கு மிக முக்கியமான காரணம். சராசரியான ஒரு தயாரிப்புக்கு மேலான ஒரு பாடல் சிறப்பான தோற்றமளிக்கபட்டதற்கு பல மாத கால ப்ரோமோஷனே காரணம். நிச்சயமாக விளம்பரத்தால் மட்டுமே எந்த ஒரு வெற்றியையும் பெற்றுவிட முடியாது இருப்பினும் அது வெற்றியை சுவைப்பதற்கான ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும். அதே போல உங்களின் வாழ்க்கையில் உங்களை நீங்களே விளம்பரப்படுத்தி கொண்டால் அது உங்களுக்கு நிச்சயமாக வெற்றிக்கான சிறந்த வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும். 


இந்திய திரைப்படங்களில் பல சிறந்த பாடல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் ஏன் இதை சாத்தியப்படுத்த முடியவில்லை என்பதற்கு ஒரு டஜன் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதில் ஒன்று விளம்பரமின்மை கூட காரணமாக இருக்கலாம். உங்களை விட திறமை குறைந்தவர்கள் பெரும்பாலான நேரங்களில் வெற்றி பெறுவார்கள். அதே போல உங்களை விட மிகவும் திறமைசாலிகள் பலரும் உங்களின் இடத்தை எட்ட முடியாமல் இருக்கலாம். அதற்கு அவர்களின் உழைப்பை காரணம் காட்ட முடியாது. ஏன் என்றால் ஒரு கட்டத்திற்கு பிறகு விஷயங்கள் உங்கள் கையில் இல்லை. 


ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களால் முயன்ற முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர் அது அவர்களுக்கு பயனளித்துள்ளது. வாழ்த்துக்கள்!!! இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்" என பதிவிட்டுள்ளார். 



உலகமே ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் ஆஸ்கர் விருது பெற்றதற்கு  கொண்டாடி வரும் இந்த சமயத்தில் சுமந்த் ராமனின் வாழ்த்துடன் சேர்ந்த ட்விட்டர் பதிவு மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.