ஆண்கள் எப்போதுமே சந்தர்ப்பவாதிகள் தான். அதில் மணியையும் சேர்த்துதான் சொல்கிறேன் என்று சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார்.


ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில் தங்களின் கல்யாணம், காதல், எழுத்துகள், கடிதம், ஃபவுண்டேஷன் என பலவற்றைப் பற்றியும் சுஹாசினி சுவாரஸ்யமான பதில்களைக் கூறியுள்ளார்.
அதிலிருந்து வருமாறு:


நான் பரமக்குடியில் ஒரு கிராமத்தில் வீட்டின் மூன்றாவது பெண் குழந்தையாகப் பிறந்தேன். எங்கள் ஊரில் அப்போதெல்லாம் மூன்றாவது பெண் குழந்தை வேண்டாத குழந்தை. ஆனால், என் தாய், தந்தை அப்படி நினைக்கவில்லை. அதனால் தான் நான் இன்று சுஹாசினி மணிரத்னமாக இருக்கிறேன். தமிழ் சினிமாவில் இப்போதைக்கு எனது ஃபேவரைட் இயக்குநர் என்றால் அது செல்வராகவன் தான். அவர்களைத் தவிர கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின் ரொம்பப் பிடிக்கும். 


மணிரத்னத்தின் இயக்கத்தில் எனக்கு ரொம்பப் பிடித்த படம் நாயகன். பிடிக்காத படம் கீதாஞ்சலி. நாயகனுக்குப் பிறகு செக்கச் சிவந்த வானம் பிடிக்கும். மணிரத்னத்துடன் நான் முதன்முதலில் இணைந்து வசனம் எழுதிய படம் அஞ்சலி. திருடா திருடா, இருவர், ராவணன் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளேன். அதன்பின்னர் மணியுடன் நான் சேர்ந்து பணியாற்றவில்லை. தளபதி படத்தில் சோபனாவுக்காக டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பின்னர் திருடா திருடா படத்தில் ஹீராவுக்காக டப்பிங் பேசியிருக்கேன். நான் ரைட்டரானது மணியால் தான். நான் நிறைய கவிதை எழுதுவேன். அவர் அவுட்டோரில் இருக்கும்போதெல்லாம் நிறைய கடிதம் எழுதி அனுப்புவேன். அவரும் அனுப்புவார். இப்போது நான் எழுதிய கடிதம், அவர் எனக்கெழுதிய கடிதம் எல்லாவற்றையும் அவரே வைத்துள்ளார். அதிலிருந்து அவ்வப்போது சில சீன்களை எடுத்துக் கொள்வார். என்னிடம் ஒருமுறை நீ எழுதுவாயா என்றார். நான் கவிதை எழுதுவேன் என்றேன். அவர் இல்லை கதை எழுதுவாயா என்றார். நான் எனக்கு வராது என்றேன். உன்னால் 5 நிமிடம் தொடர்ந்து பேசி அதை மற்றவர்களை கேட்கவைக்க முடியும் என்றால் நீயும் எழுத்தாளரே என்று சொன்னார்.






மணிரத்னம் எனக்கு அண்மையில் ஒரு காஸ்ட்லி ஹெட்செட்டை பரிசாகக் கொடுத்தார். அது உண்மையிலேயே ரொம்ப எக்ஸ்பன்சிவ். அப்புறம் தான் தெரிந்தது நான் டிவி பார்ப்பது மணிக்கு தொந்தரவாக இருப்பதால் அந்த ஹெட்செட்டை வாங்கிக் கொடுத்துள்ளார் என்பது. ஆண்கள் எப்போதுமே சந்தர்ப்பவாதிகள் தான்.


மணிரத்னத்தின் பல்லவி அனுபல்லவி படத்தில் நாயகியாக நடிக்க என்னைக் கேட்டார்கள். ஆனால் நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் என் படத்தில் நீ எப்போதுமே நடிக்க முடியாது என்றார். அதை இப்பவும் மறைமுகமாகப் பின்பற்றுகிறாரோ என்று எனக்குத் தோன்றும். மணியிடம் எனக்குப் பிடித்தது அவருடைய வெற்றியை அவர் எடுத்துக்கொண்ட விதம். அப்புறம் பெண்கள் மீது அவர் கொண்ட மரியாதை. அதேபோல் என் மகன் நந்தனிடம் மிகவும் பிடித்த விஷயம், அவனுடைய புத்திக்கூர்மை. அவன் மணியிடம் நீ சரியான ஃபில்ம் மேக்கர் இல்லை என்பான். என்னிடம் நீ ஏன் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார். உன் திறமைக்கு 2000 பெண்களுக்கு வேலை கொடுத்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் தொழில்முனைவராக இருக்க வேண்டும் என்பான்.


நானும் மணியும் சேர்ந்து தனித்து வாழும் பெண்களுக்காக நாம் என்ற ஒரு ஃபவுண்டேஷனை நடத்தி வருகிறொம். அதில் தனித்து வாழும் அதாவது கணவரை இழந்த, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களின் ஆளுமையை நாங்கள் செதுக்கிவருகிறோம். அதில் எனக்கொரு ஆத்ம திருப்தி” என்று சுஹாசினி கூறினார்.