எதற்கு தான் கூட்டம் சேர்ப்பது என்கிற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது. சுற்றுலாக்கு வந்த இடத்தில் சுற்றிப் பார்த்தோமா... மகிழ்ச்சியாய் இருந்தோமா என்றில்லாமல், தனியார் மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தியது மட்டுமல்லாமல், கேள்வி கேட்ட காவலாளியை தாக்கியுள்ளது ஒரு கும்பல். அந்த கும்பல் மது போதையில் இருந்தது ஒரு புறம், அந்த கும்பலுடன் வந்திருந்த பெண்களும், அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கி கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு, பலரை காப்பாற்றும் மருத்துவமனையை கவலைக்குரியதாக மாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரமலான் பண்டிகை விடுமுறை என்பதால் கேரளா மாநிலம் கொல்லம் , சவரா பகுதியில் இருந்து பழனி, கன்னியாகுமரி, மண்டைக்காடு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்று திரும்பும் வழியில் வாகனங்களில் வந்த நபர்கள் குமரி எல்லை அருகே கேரளா மாநிலம் பாறசாலை சரஸ்வதி பல்நோக்கு மருத்துவமனை அருகே டீ கடை ஒன்றில் டீ குடிக்க இறங்கினர்.
தொடர்ந்து அருகில் உள்ள சரஸ்வதி மருத்துவ மனையில் அனுமதி இன்றி புகுந்து கழிவறைக்குள் கூட்டம் கூட்டமாக சென்று கழிவறையை பயன்படுத்தி விட்டு காவலாளியிடம் தகாரிலும் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த காவலாளி மீது சுற்றுலா சென்று திரும்பிய பெண்கள் உள்ளிட்ட அந்த கும்பல் மருத்துவ மனைக்குள் புகுந்து காவலாளிகள், ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். பெண்கள் கல்லை எடுத்து மருத்துவமனை மீது வீசினர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பாறசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மருத்துவமனையில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த கும்பல் அத்துமீறி சென்று தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் அந்த கும்பலில் ஆண்கள் பலரும் மது போதையில் இருந்தும் போலீசார் தரப்பில் இருந்து தெரிவித்தனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்த போலீசார் உயர் மட்ட அரசியல் வட்டாரங்களில் இருந்து இவர்களை விடுதலை செய்ய அழுத்தம் வந்ததை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட கொல்லம் மாவட்டம் சவர பகுதியை சேர்ந்த அரவிந்த், சந்தீப், ராமச்சந்திரன், கிரிஷன், மனோஜ், சுரேஷ் குமார் ஆகிய ஆறுபேர்கள் மீது வழக்குப்பதிவு செய்த பின் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பரபரப்பான பிரபல பல்நோக்கு மருத்துவமனைக்குள் குடி போதையில் ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் நோயாளிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது அதன் CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.