Sudha Kongara: ‘ரத்தன் டாடாவின் பயோபிக்கை எடுக்கவில்லை..’ - சுதாகொங்கரா ட்விட்டரில் விளக்கம்!

Sudha Kongara: சூரரைப் போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா, தான் ரத்தன் டாடாவின் பையோபிக்கை எடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்கும் இயக்குனர்களுள் ஒருவராக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் சுதா கொங்கரா. இறுதிச்சுற்று படம் மூலம் தனக்கான முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்த இவர் அடுத்து இயக்கிய சூரரைப் போற்று திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. 

Continues below advertisement

விருதுகளை அள்ளிக்குவித்த சூரரைப் போற்று!

2020ஆம் ஆண்டு வெளியான படங்களில் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த படம், சூரரைப் போற்று. இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். சாமானிய மனிதர்களை கம்மி விலையில் விமானத்தில் பறக்க வைத்த ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படமாக இது வந்தது. 

சூர்யாவின் 2டி நிறுவனமே இப்படத்தையும் தயாரித்திருந்தது. கொரோனா காலமாக இருந்ததால், திரையரங்குகளில் திரையிடப்படும் வாய்ப்பை இப்படம் இழந்தது. இதனால், ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகியிருந்த இப்படம், ரசிகர்களின் ஆசைப்படி கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, ஓரிரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. 


 

ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கைய மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில், கதாநாயகனுக்கு கொடுக்கப்பட்டிருந்த அதே முக்கியத்துவம் கதாநாயகிக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. இதுவே இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்டாக அமைந்தது. நல்ல கதையம்சத்தோடு உருவாகி இருந்த இப்படம், சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான விருது என, பல்வேறு விருதுகளை அள்ளியது.

மீண்டும் ஒரு பயோ-பிக்?

சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து, அவர் அடுத்து ஒரு பயோ-பிக் படத்தை எடுக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. நலிந்தோருக்கும், வறுமையில் வாடுபவர்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்குபவர் ரத்தன் டாட்டா. இவர், மிகப்பெரிய தொழிலதிபர். இவரை வைத்து சுதா கொங்கரா படம் எடுக்கவுள்ளதாகவும், அதில் சூர்யாவே கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் பரவியது. இதனை உண்மை என நம்பிய சிலர், இது குறித்து சுதா கொங்கரா மற்றும் சூர்யாவை அவ்வப்போது கேள்வியெழுப்பி வந்தனர். 

சுதா கொங்கரா ட்வீட்:

ரத்தன் டாட்டாவின் பயோ-பிக் படம் குறித்த வதந்தி வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், சுதா கொங்கரா இதனை மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் ரத்தன் டாட்டாவின் பயோ-பிக் படத்தை எடுக்க போவதில்லை” என தெரிவித்துள்ளார். 

 

மேலும், “நான், ரத்தன் டாட்டாவின் மிகப்பெரிய ரசிகை. இருந்தாலும் அவர் குறித்த பயோ-பிக் படத்தை எடுக்கும் நோக்கம் எனக்கு தற்போதைக்கு இல்லை. என்னுடைய அடுத்த படம் குறித்து நீங்கள் அனைவரும் இவ்வளவு ஆர்வமுடன் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அது குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், ரத்தன் டாட்டாவின் படம் குறித்த செய்திக்காக காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola