சுப்ரமணியபுரம் திரைப்படம் (2008) திரைக்கு வந்து இன்றுடன் 13 வருடங்கள் ஆகிவிட்டன. 20 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை வாழ்க்கை முறையை இயக்குனர் சசிகுமார் மிகத் துல்லியமாக காட்சிப்படுத்தியிருப்பார். இந்தத் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது.



1. உலகப் புகழ்ப்பெற்ற  திரைப்பட இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செசி, அனுராக் கஷ்யாப்-ன் கேங்க்ஸ் ஆஃப் வசேப்பூ (Gangs of Wasseypur) திரைப்படம் தனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். ஆனால், தனது கேங்க்ஸ் ஆஃப் வசேப்பூருக்கு 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் உந்துதலாக அமைந்தது என அனுராக் காஷ்யாப் சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்தார். 


2.மானுடவியல் ஆய்வாளர் ஆனந்த் பாண்டியன் சுப்ரமணியம் திரைக்கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சமீப காலங்களில் தமிழ் திரைக்கதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுவது மிகவும் அரிதாகவே உள்ளது.சாரு நிவேதிதாவின் 'சுப்ரமணியபுரம் - துரோகத்தின் காவியம்'  உட்பட பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் இத்திரைப்படத்தை விவாதித்துள்ளன. 


 

சுப்ரமணியபுரம் திரைப்படம் முன்னெடுக்கும் பல்வேறு கேள்விகள்:   

 

காதல், வெயில்,பருத்திவீரன், சுப்ரமணியபுரம், தமிழ் எம்.ஏ, நான் கடவுள், நந்தா, சேது போன்ற திரைப்படங்கள் அனைத்தும் திராவிட அரசியலை கேள்வி கேட்பதாய் அமைந்தாலும், திராவிட அரசியல் உருவாக்கிய சொல்லாடலுக்குள் தான் இயங்குகிறது. எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான நாடோடி மன்னன் திரைப்படத்தின் மன்னர் மார்த்தாண்டன் கதாபாத்திரமும், சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் வரும் அழகர்/பரமன் கதாபாத்திரமும் திராவிட அரசியலின் இரண்டு முகங்கள்.                                

 

1. அழகர் (ஜெய்), பரமன் (சசிகுமார்), காசி (கஞ்சா கருப்பு), சித்தன், டும்கான் ஆகியோர் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று எங்குமே திரைப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை. சாதி வேறுபாடு கடந்த நட்பை இந்த படம் பேசுகிறது. இருப்பினும், படத்தின் இறுதிக் காட்சிகளில் காசியின் துரோகம் பார்வையாளர்களை கோபப்பட வைக்கிறது. உண்மையில், கனகு கதாபாத்திரத்தை விட (சமுத்திரக்கனி) காசியின் கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம் எனலாம்.   

 

2. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவுடன் அழகரை ஏன் துளசி புறக்கணிக்கவில்லை. அறநெறி? கற்புநெறி?....கல்லானாலும் கணவன் என்ற வாதத்தைத்தான் இது நியாயப்படுத்துகிறது. படத்தின் இறுதிக் காட்சிகளில்  அழகருக்கு துளசி செய்த நம்பிக்கைத் துரோகம் பேசப்பட்ட அளவிற்கு துளசியின் நம்பிக்கையை பெற அழகர் எங்குமே முயற்சிக்கவில்லை? என்பதும் பேசப்பட்டிருக்க வேண்டும்.       

 

3. கனகின் அண்ணன் மகள் துளசி (சுவாதி) கதாபாத்திரத்திலும் திராவிட அரசியலின் மற்றொரு தோல்வி வெளிப்படுகிறது. துளசி கூட்டுக் குடும்பத்தில் வாழ்கிறார்.இருப்பினும், தைரியமாக தனக்கு பிடித்தவரைக் காதலிக்கிறார். இது, முற்றிலும் பாராட்டுக்குரிய விஷயம். படத்தின் பிற்பகுதியில், துளசிக்கு இரண்டு வகையான வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஒன்று, அழகருடன் சேர்ந்து வாழ வேண்டும். மற்றொன்று தனது சொந்த குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்த, இரண்டுமே துளசிக்கான வாய்ப்பாகக் கருத முடியாது.ஏதோவொரு, குடும்ப கட்டமைப்பை பேணிக்காக்கும் விதமாகவே பெண்கள் கதாபாத்திரம் தீட்டப்படுகிறது. சமுதாயத்தில் பெண்களை எங்கே வைப்பது என்ற ஒற்றைக் கேள்வியில் தான் 70 ஆண்டுகால தமிழ்நாடு அரசியல் இயங்கி வருகிறது.        

 



 

3. காதல் படத்தில் 'ஸ்டீப்ன் (சென்னையில் முருகனுக்கு அடைக்களம்  தரும் கதாபாத்திரம்)' ,பருத்திவீரன் படத்தில் வரும் 'டக்ளஸ்' கதாபாத்திரம், சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் வரும் 'டும்கான்' கதாபாத்திரம்  தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக உள்ளது.  இந்த மூன்றுமே விளிம்புநிலை மக்களுக்கான பிரதிநிதித்துவமாக உள்ளது. சாதி கட்டமைப்பைத் தாண்டிய பிரச்சனைகளை  இக்கதாபாத்திரங்கள் பேசுகின்றன. பருத்தி வீரனில் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறத் துடிக்கும் "டக்ளஸ்" கதாபாத்திரம், ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கும்போது திரையரங்கில் மகிழ்ச்சி தாண்டவமாடும். சாதி கொடுமையில் இருந்து வெளிவந்த ஒருவருக்குத்தான் 'டக்ளஸ்' னு பெயர் இருக்கும். இதில், திராவிட அரசியலின் அடுத்தக்கட்ட நகர்வும்  'ஸ்டீப்ன்', 'டக்ளஸ்', 'டும்கான்' ஆகிய கதாபாத்திரங்களில் இருந்தும் தொடங்கப்பட வேண்டுமா? இவர்களுக்கான அரசியலை முன்னிலைப்படுத்த வேண்டுமா? இவர்கள் தான் நாளைய கதாநாயகர்களா?       

 

தமிழ் சினிமாவின் பரிணாமம்:   

 

1975- களுக்கு பின்புவந்த திரைப்படங்களில் கதாநாயகன் ஆண்மைத்தனம் இல்லாதவனாகவும்,உடல் குறைபாடு கொண்டவனாகவும்  சித்தரிக்கப்பட்டான். 16 வயதினிலே,ரோசாப்பூ ரவிக்கைகாரி, பூட்டாத பூட்டுகள், கன்னிப் பருவத்திலே போன்ற பல்வேறு திரைப்படங்களில் பெண் கதாபாத்திரம் நாயகனை விட முக்கியத்துவம் பெற்று விளங்கும். அதாவது, கதாநாயகர்கள் மாடுகளை அடக்காமல் பாட்டுப் பாட பால் கறக்க ஆரம்பித்தனர். கதாநாயகர்களின் இத்தகைய சித்தரிப்புக்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகிறது.   

 




 

இதுகுறித்தத் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர் கார்த்திகேயன் தாமோதரன்,’திராவிட அரசியல் முன்னெடுத்த கொள்கையும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.  சமூகநீதி அரசியல்  காரணமாக நிலஉடமை சமூகத்தினர் சமூக கட்டமைப்பில் அந்நியப்பட தொடங்கினர். சுரண்டப்பட்ட விளிம்புநிலை மக்கள் முதன்முறையாக அதிகாரத்தை நோக்கி நகர்வதற்கான அடிப்படை கட்டமைப்பு உருவாகத் தொடங்கியது. இதன், காரணமாக அப்போது வெளிவந்த திரைப்படங்களில் கதாநாயகர்கள் வலுவிழந்த நபர்களாகக் காட்டப்பட்டது’  

 

90களின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலகமயமாக்கல் அதன்பின் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி காரணமாக நிலவுடமை மற்றும் நிலமில்லாத சாதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் சாதி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த தொடங்கின. இந்த காலகட்டங்களில் தான் காதல், பருத்திவீரன், சுப்ரமணியபுரம், வெயில் போன்ற திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்தன. விளிம்புநிலை மக்களில் இருந்து கதாநயாகன் உருவாக தொடங்கினார்கள். கதாநாயகனின் வெற்றி என்பதை விட, அவனின் ஏக்கங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், வலிகளை 2000க்குப் பின் வந்த திரைப்படங்கள் முதன்முறையாக  பதிவு செய்ய ஆரம்பித்தன. எனவே, 2008ல் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம், 80களின் மதுரை எப்படி இருந்தது என்பதை மட்டும் காட்டவில்லை. 2018, 2108 என எதிர்கால மதுரை எப்படியிருக்கும் என்பதையும் பேசுகின்றது.