பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஷாகுல் நேர்காணல் ஒன்றில் நடிகர் அர்ஜூனுடன் ஏற்பட்ட பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 1990களின் காலக்கட்டத்தில் புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் ஷாகுல். சிரஞ்சீவி தொடங்கி அன்றைய முன்னணி நடிகர்களுக்கும் டூப் போட்டுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “நான் 24 வயதில் தூத்துக்குடியில் சென்னைக்கு வந்தேன். ரயில்வேயில் தற்காலிகமாக வேலை செய்து வந்த நிலையில் அங்கிருந்து வேறு வேலை தேடி வந்தேன். இந்தி படங்களில் பணியாற்றிய தாஸ் மாஸ்டர் தூத்துக்குடியில் இருந்து தான் டூப் போட ஆள் அழைப்பார். 1970 சமயங்களில் சென்னையில் அனைத்து இந்திய மொழிகளுக்குமான ஸ்டூடியோக்கள் இருந்தது. என்னுடைய மாமா மூர்த்தி தான் திரையுலகுக்கு அழைத்து வந்தார்.
நான் யூனியனில் உறுப்பினர் ஆனவுடன் ரத்தினம் மாஸ்டரிடம் பணியாற்றினேன். முதன் முதலில் இந்தி படம் ஒன்றில் பணியாற்ற போனேன். எனக்கு ஒரு சண்டைக்கு அன்றைய காலத்திலேயே ரூ.8 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்கள். சிரஞ்சீவி தான் என்னை ஸ்டண்ட் மாஸ்டர் ஆக்கினார். அப்போது எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற பயம் இருந்தது. வருடத்துக்கு 3 படம் தருவேன் என சிரஞ்சீவி சொன்னார். ஒரே கம்பெனியில் தெலுங்கில் படம் பண்ணினேன். நடிகர் அர்ஜூனை தெலுங்கில் நான் தான் அறிமுகம் செய்தேன்.
அவர் ஃபைட் எல்லாம் சூப்பராக பண்ணுவார். அர்ஜூன் நடிச்ச முதல் படம் பெரிய அளவில் தோல்வியடைந்ததாக தகவல் வந்தது. தயாரிப்பாளருக்கு ஆறுதல் சொல்ல போனால் ரிசல்ட் மாறியதாக சொன்னார். கிட்டதட்ட ஓராண்டு அந்த படம் ஓடியது. கன்னடத்தில் அர்ஜூனுடன் நான் படம் பணியாற்றியதால் தெலுங்கில் அழைத்தவுடன் அவரை பரிந்துரைத்தேன். எனக்கு அர்ஜூனின் முதல் தெலுங்கு படம் ஓடியதில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் அர்ஜூனுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. நாங்கள் ஒரு 10 படம் இணைந்து பண்ணினோம். அதில் ஒரு படத்துக்கு சூப்பர் சுப்பராயனை அவர் பரிந்துரை செய்தார். ஆனால் தயாரிப்பாளர் எனக்கு முதலில் அட்வான்ஸ் கொடுத்தார். நான் பெரிய அளவில் முதலில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இரண்டாம் படமும் அதே மாதிரி பண்ணினார். நேரடியாக அவரிடமே சென்று இப்படியெல்லாம் பண்ணாதே. நீ யாரை வேண்டுமானாலும் ஸ்டண்ட் மாஸ்டராக வைத்துக்கொள். ஆனால் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டு பின்னர் வாங்குவது நன்றாக இல்லை என சொல்லிவிட்டேன்.
திரும்ப அர்ஜூனுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என நிலை ஏற்பட்டது. அவர் ஷூட்டிங்கில் நான் தான் உங்களை பரிந்துரை செய்தேன் என என்னிடம் சொன்னார். ஆனால் அவர் சும்மா சொன்னார் என்பதை நான் ஆதாரத்துடன் வெளிப்படுத்தவும் அர்ஜூனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. தொடர்ந்து தமிழில் எனக்கு ஒரு படம் பண்ணி தர வேண்டும் என கேட்டார். அந்த படம் தான் கர்ணா. அதன்பிறகு அர்ஜூனுடன் நான் இணையவே இல்லை.
அர்ஜூனின் அப்பா என்னிடம் வந்து பேசினார். அவருடனான பிரச்சினை குறித்து பேசினார். பின்னர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்” என தெரிவித்துள்ளார்.