'ஆச்சி' என்று சுருக்கமாக அழைக்கப்பட்டாலும் வாழ்நாளில் பல சாதனைகளை செய்து பிரமிக்க வைத்த ஆச்சி மனோரமாவின் பிறந்த தினம் இன்று.


கோபி சந்தா என்ற இயற்பெயரை கொண்ட ஆச்சி மனோரமா வறுமை காரணமாக பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். சிறு வயது முதலே தன்னுடைய கணீர் குரலாலும், அதன் வழியே வந்த பாட்டின் மூலமும் அதற்கு ஏற்றார் போல நடன அசைவுகளாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் கவனத்தை பெற்று எல்லோருக்கும் பிடித்தமான ஒரு சிறுமியாக வலம் வந்தவர்.



 


அவரின் பலதரப்பட்ட பரிணாமங்கள் பிரமிக்க வகையில் இருந்தன. அதன் மூலம் நாடகக்குழு  மூலம் மேடையேறியவருக்கு சினிமா வாய்ப்பு பெற்று எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் ஜெய்சங்கர் வரை அனைவரின் படங்களிலும் ஏதாவது ஒரு கதாபாத்திரமாக இடம்பெற்றார்.


அந்த காலத்து நடிகர்கள் மட்டுமின்றி அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினி, கமல், சத்யராஜ் முதல் அஜித், விஜய் வரை அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.


காமெடியில் கலக்கிய மனோரமா ஆச்சி எந்த ஒரு நகைச்சுவை நடிகருடன் இணைந்தாலும் அந்த கூட்டணி கனகச்சிதமாக இருக்கும் என்பது அவருக்கே உள்ள தனி சிறப்பு. ஏ. பீம்சிங் முதல் ஷங்கர் வரை கிட்டத்தட்ட அனைத்து முக்கியமான இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் என ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்தவர் என்ற பெருமையை பெற்றவர். 1500க்கும் மேற்பட்ட படங்களிலும் 5000க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சாதனையாளர்.


நடிகையாக மட்டுமின்றி பாடகியாக, தயாரிப்பாளராக பல பரிணாமங்களை வெளிப்படுத்திய மனோரமா ஆச்சியின் தனிப்பட்ட வாழ்க்கையில் வலி, வேதனை என பல கடினமான சூழலை எதிர்கொண்டாலும் திரையில் புன்சிரிப்பை மட்டுமே காட்டி பார்வையாளர்களை பரவசமடைய செய்தவர். மெட்ராஸ் பாஷை, தூத்துக்குடி பாஷை, பிராமணர் பாஷை என எந்த ஒரு பாஷையாக இருந்தாலும் அதில் சிறப்பாக அசத்தக்கூடியவர்.



சம்சாரம் அது மின்சாரம், ஜென்டில்மேன், பாட்டி சொல்லை தட்டாதே, கிழக்கு வாசல், நடிகன், சின்ன கவுண்டர், இது நம்ம ஆளு, சின்ன தம்பி, அபூர்வ சகோதரர்கள் என அவரின் நடிப்பை போற்ற கூடிய திரைப்படங்களின் பட்டியலில் இவை உதாரணம்.


வாழ்நாள் முழுவதும் சாதனையாளராகவே வாழ்ந்த ஆச்சி மனோரமா, 2015ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரின் உயிர் இந்த உலகை விட்டு பிரிந்தாலும் அவரின் எண்ணில் அடங்கா படைப்புகள் மூலம் என்றும் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்