தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வேட்டையன்'. இப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கும்  அதே நாளில் நடிகர் சூர்யாவின் 'கங்குவா' படமும் வெளியாக உள்ளது. இந்த தகவல் இரு தரப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுவரையில் சூர்யா படங்களுக்கு இல்லாத அளவுக்கு மிக பெரிய பட்ஜெட்டில், வரலாற்று பின்னணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது என்பதால்  மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 



ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த இரு படங்களையும் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. வணிக ரீதியாக இந்த தேதி நல்ல வரவேற்பை பெரும் என்பதால் இந்த தேதியை தேர்ந்து எடுத்துள்ளனர். ஆனால் இது குறித்து பல விமர்சனங்கள், கேள்விகள் எழுந்து வருகின்றன. நடிகர் ரஜினிகாந்துடன் மோத தயாராகி விட்டாரா சூர்யா? இப்படி வெளியாவதால் ஏதாவது ஒரு படத்தின் வசூல் பாதிக்கப்படுமா? ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படுமா இப்படி பல கேள்விகள்  ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 


அந்த வகையில் கங்குவா படத்தின் தயாரிப்பாளரான ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கே. ஈ. ஞானவேல் ராஜா நேர்காணல் ஒன்றுக்கு இது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். "நான் என்னுடைய பிறந்தநாளுக்கு கூட கோயிலுக்கு போனது கிடையாது. ஆனால் ரஜினி சார் பிறந்தநாளுக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு போய் 108 சுற்று சுத்தி வருபவன் நான். என்னுடைய பெற்றோர் பிறந்தநாளுக்கு கூட கோயிலுக்கு போயிட்டு வந்துருவோம். ஆனா 108 சுற்று சுற்றுவது எல்லாம் ரஜினி சாருக்காக மட்டும் தான். ரஜினி சாரோட அப்படி ஒரு எமோஷனல் கனெக்ட் இருக்கிறது. 


 




ரஜினி சார் படத்தோட என்னோட படம் கிளாஷ் என சொன்னால் தானே 1000 யூடியூப் சேனல்களுக்கு கன்டென்ட் கிடைக்கும். 100% அதனால் மட்டும் தான் அப்படி வதந்தி பரப்புறாங்க. ரஜினி சார் கூட கிளாஷ் பண்றதுக்கான ஐடியாவும் இல்ல, வரவும் மாட்டோம். அன்னைக்கு தேதி ஃப்ரீயா இருந்துது. அது மட்டும் இல்ல ஒரு பான் இந்தியன் படத்துக்கு அந்த தேதி ஒரு சிறப்பான தேதி. அது தான் உண்மையான காரணம். 


உண்மையை சொல்லணும்னா தெலுங்கு திரையுலத்தின் பத்திரிகை மற்றும் மீடியாவிடம் இருந்து சரிசமமான அன்பும் ஆதரவும் கிடைக்கிறது. அதனால நம்ம யூடியூபர்ஸ், நம்ம மீடியா கிட்ட ரெக்வஸ்ட் பண்ற விஷயம் என்னனா அன்பை பரப்புங்க. நெகட்டிவிட்டியை  பரப்பாதீர்கள். அனைத்து யூடியூபர்ஸ், விமர்சகர்கள், பிரஸ், மீடியா அனைவருமே திரையுலத்தை சேர்ந்தவர்கள் தான். நீங்களும் இந்த துறையை சேர்ந்தவர்களாக இருக்கும் போது இதை இழந்துவிட்டால் நானும் இங்கு இல்லை, நீங்களும் இங்கு இல்லை.






படமே எடுக்கலைனா எதை பத்தி பேசுவீங்க. ஹீரோவே நடிக்கலைனா எந்த ஹீரோ பத்தி காஸிப் பண்ணுவீங்க. எந்த ஒரு விஷயம் எடுத்துக்கிட்டாலும் அதற்கு நிச்சயம் பாசிட்டிவ் பக்கம் என ஒன்று இருக்கும்.  அந்த பாசிட்டிவ் விஷயத்தை கொண்டாட ஆரம்பிச்சோம்னா நல்ல கன்டென்ட் வெளியில் வரும்" என பேசி இருந்தார்.