TN Headlines:புதிய தலைமைச் செயலாளர் நியமனம்..அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் - முக்கியச் செய்திகள்!

Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகள் அடங்கிய தொகுப்பு இது!

Continues below advertisement

மீண்டும் ஒரு தமிழர்! தமிழ்நாட்டின் 50வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்

Continues below advertisement

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் தமிழ்நாட்டின் 50வது தலைமைச் செயலாளர் ஆவார்.  தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்த சிவ்தாஸ் மீனா பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். மு,க,ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தி.மு.க. ஆட்சியில் இறையன்புக்கு பிறகு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது தமிழர் இவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

'திமுககாரரைவிட கருணாநிதியை புகழ்ந்த அமைச்சர் ராஜ்நாத் சிங்; தூக்கமே வரவில்லை'- முதல்வர் ஸ்டாலின்!

’’கருணாநிதி பற்றி ராஜ்நாத் சிங் உள்ளத்தில் இருந்து பேசினார். அதனாலேயே திமுககாரரைவிட, பாஜக அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதியைப் புகழ்ந்து பேசினார். கூட்டணிக் கட்சித் தலைவர்களைப் போல, ராஜ்நாத் சிங் பேசினார். விழா சிறப்பாக நடைபெற்ற மகிழ்ச்சியில் எனக்கு உறக்கமே வரவில்லை.”என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ரூ. 100 மதிப்பிலான கருணாநிதி நினைவு நாணயம் நேற்று (ஆக.18) வெளியிடப்பட்டது.

மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு; நாமக்கல் மாணவர் முதலிடம்- காண்பது எப்படி?

தமிழ்நாட்டில் 2024-25ஆம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டியலை வெளியிட்டார்.இதில் நாமக்கல் மாணவர் ரஜனிஷ் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சென்னை, அயனப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் சையது ஆரிஃபின், சேத்துப்பட்டைச் சேர்ந்த மாணவி ஷைலஜா ஆகியோர் அடுத்தடுத்து 2, 3ஆவது இடங்களைப் பெற்றுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு நேற்று  (18.08.2024)வெளியிட்டுள்ளது.

"இந்தியாவின் டைட்டன் கருணாநிதி" புகழ்ந்து தள்ளிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் 5 முறை முதலமைச்சராக பதவி வகித்தவருமான  கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்து பேசினார். விழாவில் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். இந்தியாவின் டைட்டன் போன்றவர் கருணாநிதி என்றும் வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணிக்காத்தவர் என்றும் தெரிவித்தார்.

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாவது நாளாக 16,500 கன அடியாக நீடித்து வருகிறது.

கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 16,500 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 16,500 கன அடியாக குறைந்துள்ளது.

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவர விவரம் இதோ!

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோவை நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (19.08.2024) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தரும்புரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தொடரும் அதிரடிகள்; தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம்

நிர்வாகக் காரணங்களுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் அடிக்கடி நிகழும் நிலையில், தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ்ஸை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே தூத்துக்குடி ஆட்சியராக இருந்த லட்சுமிபதி, முதல்வரின் இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இளம்பகவத் ஐஏஎஸ் ஏற்கெனவே பொது நூலகத் துறை இயக்குநராகவும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பொறுப்பாளர் ஆகவும் செயல்பட்டு வந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


 

Continues below advertisement