வைர நெக்லஸ் நடிகர் விஜய் கையால் கொடுக்கப்பட்ட சம்பவம் பெருமையாக இருப்பதாக 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி தெரிவித்துள்ளார். 


சென்னையில் உள்ள நீலாங்கரையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் கடந்த ஜூன் 17 ஆம் தேதி தொகுதி வாரியாக 10, 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த  மாணவ, மாணவிகளுக்கு  சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார். காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்வு இரவு 11 மணி வரை நடந்தது. நடிகர் விஜய்யும் சற்றும் அசராமல் வந்திருந்த அனைவருக்கும் தன் கையாலேயே பொன்னாடை போர்த்தி சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்திருந்தனர். 


இந்த நிகழ்ச்சியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல்முறையாக 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த திண்டுக்கலைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் வழங்கி அசத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத விஜய் ரசிகர்களும். பொதுமக்களும் அவரை பாராட்டினர். இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்களில் இந்நிகழ்ச்சி வைரலானது. தொடர்ந்து விஜய்யின் கல்வி குறித்த பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். 


இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நந்தினி, ‘விஜய்யுடனான சந்திப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பேட்டியில், ‘விஜய்யை சந்தித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவர் நெக்லஸ் கொடுத்த நிமிடத்தை மறக்கவே மாட்டேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைய மார்க் எடுத்த மாணவ, மாணவியர்களை அவர் சந்திக்கப் போறாருன்னு தான் தெரியும். ஆனால் வைர நெக்லஸ் குடுப்பாருன்னு எதிர்பார்க்கவே இல்லை. நான் இதுவரைக்கும் தங்கத்துல கூட நெக்லஸ் போட்டது இல்லை. அதுக்கான வசதியும் இல்லை’ என தெரிவித்துள்ளார். 


மேலும், ‘வைர நெக்லஸ் விஜய் கையால் கொடுக்க வைத்திருப்பது மிகவும் பெருமையான விஷயம் தான். அவரை இதுவரை படங்களில் மட்டுமே பார்த்துள்ளேன். விஜய் நடித்ததில் மெர்சல் படம் எனக்கு பிடிக்கும். நிஜத்திலும் அவர் ஹீரோ தான். மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்துவதில் பல கோடி செலவு பண்ணி இந்த நிகழ்ச்சி நடத்திருக்காரு. இந்த வைர நெக்லஸை கடைசி வரை பொக்கிஷமா பாதுகாத்து வைத்திருப்பேன்’ எனவும் நந்தினி கூறியுள்ளார்.