நடிகர் சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்து செம ஃபிட்டாக மாறியது குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். கடந்த 2020ஆம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்று காரணமாக போடப்பட்டிருந்த ஊரடங்கின் போது, தன்னுடைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை முடித்துக் கொள்ள முடிவு எடுத்ததோடு, அதனைக் கடைப்பிடித்து நம் முன் ஃபிட்டாக வந்து நின்றது அனைவரையும் அசர வைத்ததோடு, பெரிதும் ஊக்கமளிக்கும் ஒன்றாகவும் இருந்தது. இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு, தன்னுடைய யூட்யூப் பக்கத்தில் தன் உடல் எடையைக் குறைத்த Transformation வீடியோவை வெளியிட்டு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். `The Journey of #ATMAN SilambarasanTR' என்று தலைப்பு சூட்டப்பட்ட இந்த வீடியோ பதிவில், `என் பயணம் இன்னும் எண்ணற்ற பலரையும் ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையில்..’ எனக் குறிப்பிட்டுள்ளார் சிம்பு.



அதிகாலை நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, பேட்மிண்டன், கிரிக்கெட் கூடைபந்து முதலான விளையாட்டுகள், குதிரையேற்றப் பயிற்சி, ஜிம்மில் உடற்பயிற்சி, தற்காப்புக் கலைகள் முதலானவற்றைக் கடுமையாக மேற்கொண்டு தன் உடல் எடையைக் குறைத்துள்ளார் நடிகர் சிம்பு. இந்த வீடியோவில் தன் மனதை ஒருமுகப்படுத்த ஆன்மிகத்தையும் தேர்ந்தெடுள்ளார் சிம்பு. அவர் அய்யப்பனுக்கு வேண்டிக் கொண்டு மாலை அணிந்த காட்சியும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. சுமார் 101 கிலோ எடையில் இருந்து 71 கிலோ எடைக்கு குறைந்திருப்பது மிகப் பெரிய ஊக்கம் தரும் ஒன்று. மேலும், தன்னுடைய டயட்டை மாற்றியுள்ள சிம்பு, நாள் ஒன்றுக்கு 4 பிரியாணி சாப்பிட்டு வந்த அவர் தற்போது சைவ உணவு மட்டுமே உண்ணும் டயட்டிற்கு மாறியுள்ளார். இந்த வீடியோவின் மூலம் சிம்புவின் கடும் முயற்சியும், அர்ப்பணிப்பும் வெளிப்பட்டுள்ளது. 


தன்னுடைய திரைப்பயணத்தில் சுமார் 4 ஆண்டுகளாக எந்த திரைப்படங்களும் இல்லாமல் மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்தார் நடிகர் சிம்பு. மேலும் அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் சூழ்ந்திருந்தன. மேலும், அவருடைய தொழில்சார்ந்த நடத்தை சரியாக இல்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு, தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் அவர் மீது தடை விதித்திருந்தது. எனினும் இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியிலும், நடிகர் சிம்பு அவற்றில் இருந்து மீண்டு, தன்னுடைய `மாநாடு’ திரைப்படத்தின் வெற்றியின் மூலம் தானும் வெற்றி பெற்றிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கிய `மாநாடு’ திரைப்படம் திரையரங்கங்களில் வெளியாகி, சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 


நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அவரது Transformation வீடியோ இதோ...