திருவாரூர் அருகே பின்னவாசல் கிராமத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவிக்கு, குழந்தை திருமணம் செய்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். எஞ்சிய பானத்தை விஷம் என்று அறியாமல் குடித்த தங்கை  உட்பட இருவரும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் சன்னதி தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் என்பவரின் 11-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மகளுக்கும்  விழுப்புரம் மாவட்டம் ஆண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (25) என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டது.


திருமண தினத்தன்று அபிராமி இந்த திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால் ஊரில் மரியாதை குறைந்துவிடும் எனக் கூறி, சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் 13 வயதான 8 ஆம் வகுப்பு படிக்கும்  தங்கையை திருமணம் செய்துவைக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தனர். இதனால் அன்றைய தினம் 8-ஆம் மாணவிக்கும் சிவகுமாருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் முடித்து விழுப்புரம் மாவட்டம் ஆண்டி குப்பத்துக்கு மாணவி அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்,  ஒரு சில நாட்களிலேயே 8-ஆம் வகுப்பு மாணவி தப்பித்து தனது தந்தை வசிக்கும் ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்கரவாசலுக்கு வந்து விட்டார். 




அதன் பின்னர் வேதாரண்யம் குருகுலத்தில் உள்ள பள்ளியில் 8-ஆம் மாணவி சேர்க்கப்பட்டார் அவருக்கு துணையாக மாணவியின் தந்தை ஹரிகிருஷ்ணனின் தம்பி ராதாகிருஷ்ணன் மகள் வினிதா என்பவரையும் அப்பள்ளியில் சேர்த்தனர். தற்போது இருவரும் தற்போது 11-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் விடுமுறையையொட்டி  11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவரும் திருக்காரவாசலில் உள்ள தங்களது வீட்டுக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டாரின் தரப்பில் இருந்து அடிக்கடி போன் மூலம் சிவக்குமாருடன் வாழ வரும்படி குடும்பத்தார் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த 11-ஆம் வகுப்பு மாணவி நேற்று குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். 




பாதி குளிர்பானத்தை குடித்து விட்டு எஞ்சிய பானத்தை மறைத்து வைத்திருந்தார். அதில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் அவரது சித்தப்பாவின் மகள்  வினிதா எஞ்சிய குளிர்பானத்தை குடித்து விட்டார். இந்நிலையில் இதுகுறித்த விவரம் அறிந்த குடும்பத்தார் இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில், சிவக்குமார் மற்றும் இருவரது பெற்றோர்கள் உட்பட 5 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு  பதிவு செய்தும் மேலும் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும் விசாரித்து வருகின்றனர். 


உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)