நடிகர் ஷாம் நடித்த ஏய் நீ ரொம்ப அழகா இருக்க படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


இது ஒரு வசந்த் படம்


கேளடி கண்மணி, நீ பாதி நான் பாதி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், அப்பு, ரிதம் என தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக மாறியவர் வசந்த். அவரின் எட்டாவது படமாக உருவாகி இருந்தது “ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்க”. இந்தப் படத்தில் ஷாம்,சினேகா,ராஜூவ் கிருஷ்ணா, விவேக்,பாம்பே ஞானம், ஜெயாரே உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரம்யா கிருஷ்ணன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 


படத்தின் கதை


படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் இந்த படத்தின் கதையும் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது.  இளம் வயதில் இருக்கும் நான்கு பேரின் விருப்பமில்லாத காதல் மற்றும் அதனால் ஏற்படும் தோல்விகளுக்கு வித்தியாசமாக பதில் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. அந்த 4 பேராக ஷாம், சினேகா,ராஜூவ் கிருஷ்ணா, ஜெயா ரே ஆகியோர் நடித்திருந்தனர். 


நடிகர் விவேக்கின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது என்றே சொல்லலாம். குறிப்பாக ஷாமின் அறையில்  பூஜைக்கு (குடிக்க) வந்திருக்கும் இடத்தில் அவரது அம்மாவிடம் மாட்டிக்கொண்டு தப்பிக்க முயலும் காட்சிகள் கலகலப்பை ஏற்படுத்தி இருந்தது.


ஐந்து இசையமைப்பாளர்கள்


டைட்டில் மற்றும் கதையை போல 5 இசையமைப்பாளர்களை கொண்டு வித்தியாசமாக பயன்படுத்த வசந்த் விரும்பினார். அதன்படி ஸ்ரீநிவாஸ் (இனி நானும் நானில்லை), ரமேஷ் விநாயகம்(தொட்டு தொட்டு), ராகவ் (காதல் வந்துச்சோ), முருகன் (பொய் சொல்லலாம்), அரவிந்த் சங்கர் (யாமினி யாமினி) என ஐந்து பாடல்களும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. 


இந்தப் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது ஜோதிகா தான். ஆனால் 12பி படத்தில் ஏற்கனவே ஜோதிகா நடித்திருந்ததால் ஷாமின் வேண்டுகோளின்படி சினேகா மாற்றப்பட்டார் என்ற ஒரு தகவல் உண்டு. இதேபோல் பயங்கரவாத அமைப்பான ISIS- ஆல்  சிரியாவில் அழிக்கப்பட்ட பழங்கால இடிபாடுகளை பின்னணியாக கொண்ட கட்டிடத்தின் வளாகத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட கடைசி தமிழ் திரைப்படம் இதுவாகும். இந்த வளாகத்தில் தொட்டு தொட்டு பாடலின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.