தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டியானது கோலாகலமாக இன்று திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் மைதானத்தில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன் அடிப்படையில் கோவை அணியின் தொடக்க வீரர்களாக சுஜய் மற்றும் சுரேஷ் குமார் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 9 ரன்கள் எடுத்திருந்த போது சுஜய் 7 ரன்களில் வெளியேற, பின்னால் வந்த சச்சினும் 12 ரன்களில் நடையை கட்டினார்.
தொடக்க வீரர் சுரேஷ் குமாருடன் இணைந்த முகிலேஷ் லைகா அணியின் ஸ்கோர் போர்டை எங்கோ கொண்டு சென்றனர். இருவரும் கிடைக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிகளுக்கு விரட்டி அரைசதம் கடந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாரூக் கான் 7 ரன்களில் ஏமாற்றம் அளித்தாலும், அதீக் உர் ரஹ்மான் 21 பந்துகளில் அரைசதம் கடந்து அவுட்டானார்.
20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. முகிலேஷ் 51 ரன்களுடனும், ராம் அரவிந்த் 10 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.
நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் மற்றும் வாரியர் தலா 2 விக்கெட்களை எடுத்திருந்தனர்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் நெல்லை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் அருண் கார்த்திக் மற்றும் ஸ்ரீநிரஞ்சன் வந்தனர். வந்த வேகத்தில் நிரஞ்சன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, ஒன் டவுனில் களமிறங்கிய அஜிதேஷ் குருசாமி 1 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து உள்ளே வந்த பின் வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாக 13.1 ஓவர்களிலேயே நெல்லை அணி 80 ரன்களுக்குள் 9 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 36 பந்துகளில் 112 ரன்கள் தேவை என்ற நிலையில் நெல்லை அணி பரிதாபமாக காட்சி அளித்தது.
நெல்லை அணியின் 11வது வீரராக களமிறங்கிய பொய்யாமொழி 6 பந்துகளில் 3 பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டார். இதன்மூலம் நெல்லை அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. தொடர்ந்து கோவை கேப்டன் ஷாரூக் கான் வீசிய 15 ஓவரில் பொய்யாமொழி, திவாகரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, லைகா கோவை கிங்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் ஆனது.