தென்னிந்திய சினிமாவை சர்வதேச அளவிற்கு பெருமைப்படுத்திய எஸ்.எஸ். ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து உலகளவில் 1150 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அந்த வகையில் இப்படத்தின் இசையமைப்பாளரான கீரவாணிக்கு 'நாட்டு நாட்டு' பாடலுக்காக கோல்டன் குளோபல் விருது விருது வழங்கப்பட்டது.


அந்த விழாவில் கலந்து கொண்ட எஸ்.எஸ். ராஜமௌலி, ஹாலிவுட் சினிமாவின் பிரபலமான இயக்குனராக ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை நேரில் சந்தித்ததை புகைப்படங்களுடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து "நான் கடவுளை சந்தித்தேன்" என்ற கேப்ஷனுடன் வெளியிட்டு இருந்தார். சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவிய அந்த புகைப்படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு அற்புதமான வாய்ப்பை பெற்று இருக்கிறார் எஸ்.எஸ். ராஜமௌலி. 


 



மற்றுமொரு பொன்னான வாய்ப்பு :


இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்குடன் ஜூம் மீட்டிங் மூலம் கலந்துரையாடல் செய்யும் வாய்ப்பு எஸ்.எஸ். ராஜமௌலிக்கு கிடைத்துள்ளது. இந்த கலந்துரையாடலில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான இரண்டு ‘கோல்டன் குளோப்’ விருதுகளை வென்ற 'தி ஃபேபல்மேன்ஸ்' ('The Fabelmans) திரைப்படம் குறித்து பல ஸ்வாரஸ்யமான தகவல்களை இந்த அரை மணி நேர கலந்துரையாடலில் பரிமாறிக்கொண்டனர். அது மட்டுமின்றி எஸ்.எஸ். ராஜமௌலியை பாராட்டு மழையில் நனைய வைத்து விட்டார். 


ஆர்.ஆர்.ஆர் படத்தை பாராட்டிய ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் :


ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை மெய்சிலிர்க்கும் அளவிற்கு பாராட்டினார். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பேசுகையில் "உங்களை சந்திக்கும் வரையில் நான் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை பார்க்கவில்லை. சென்ற வாரம் தான் படத்தை பார்த்தேன். மிகவும் அற்புதமான ஒரு திரைப்படம். எனது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. உங்கள் படத்தின் கதாபாத்திரங்களான ராமா, ராம், ஆலியா மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் மிக சிறப்பாக நடித்திருந்தனர். கிளைமாக்ஸ் காட்சியை நீங்கள் முடித்த விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. உங்கள் படத்தை பார்த்தது எனக்கு மிக சிறந்த அனுபவமாக இருந்தது" என பாராட்டினார். 


 






தலைகால் புரியாத சந்தோஷத்தில் எஸ்.எஸ் :


இதை கேட்ட எஸ்.எஸ். ராஜமௌலி எனக்கு சேரில் இருந்து எழுந்து டான்ஸ் ஆட வேண்டும் என்பது போல உள்ளது. அந்த அளவிற்கு நான் மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன். நீங்கள் எங்களுடைய படம் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றார். மேலும் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பேசுகையில் "ஜூம் மீட்டிங் அல்லாமல் உங்களை நேரில் சந்திக்க நேரிடும் போது நீங்கள் எப்படி படம் எடுத்தீர்கள் என்பதை நான் உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார். இந்த தருணம் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலிக்கு  கூஸ் பம்ப்ஸ் வர வைத்த தருணமாக இருந்து இருக்கும். நிச்சயமாக நான் அங்கு வந்து இறங்கியதும் எப்படியாவது உங்களின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவர்களிடம் இருந்து உங்களை சந்திக்க நேரத்தை களவாடி விடுவேன். உங்களை சந்திக்க நான் மிகவும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் என்றார் எஸ்.எஸ். ராஜமௌலி.