பாகுபலி 1 , பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களின் மூலம் ஒட்டுமொத்த திரை ரசிகர்களையும் கவர்ந்து இழுத்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி  மற்றொரு பயோபிக் திரைப்படத்தை வழங்க தயாராகிவிட்டார். தென்னிந்திய திரைப்படத்தை சர்வதேச அளவில் கொண்டு நிறுத்தி ஆஸ்கர் விருதை கைப்பற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இந்த இயக்குநரின் அடுத்த படைப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது அவரின் அடுத்த படத்திக்கான அறிவிப்பு. 


'மேட் இன் இந்தியா' என்ற தலைப்பில் இந்தியா சினிமாவின் 'பிறப்பு மற்றும் எழுச்சி' சார்ந்த கதையை விவரிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ள இப்படத்தை நிதின் கக்கர் இயக்க, ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா, வருண் குப்தாவுடன் இணைந்து தயாரிக்க உள்ளார். 



வாழ்க்கை வரலாற்று படம் :


தாதாசாகேப் பால்கேயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக உள்ள 'மேட் இன் இந்தியா' படத்தின் அபிஷியல் டீசர் வெளியாகியுள்ளது. அதில் இந்திய சினிமா பல வாழ்க்கை வரலாற்றுக்கு சாட்சியாக அமைந்துள்ளது. இது இந்திய சினிமாவின் வாழ்க்கை வரலாறு. எஸ்.எஸ்.ராஜமௌலி மேட் இன் இந்தியாவை உங்களுக்கு வழங்குகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.


உணர்ச்சிவசப்பட்ட ராஜமௌலி :


முதல் டீசரை வெளியிட்ட எஸ்.எஸ்.ராஜமௌலி இப்படத்தின் கதை தனக்கு ஏற்பட்ட உணர்வை குறித்து Xல் பதிவு செய்து இருந்தார்.“நான் முதன்முதலில் கதையைக் கேட்டபோது உணர்ச்சிவசப்பட்டேன். ஒரு வாழ்க்கை வரலாற்றை உருவாக்குவது கடினமானது. அதிலும் இந்திய சினிமாவின் தந்தையைப் பற்றிய பயோபிக் உருவாக்குவது என்பது இன்னும் சவாலானது. எனது பாய்ஸ் அதற்கு தயாராக இருக்கிறார்கள். மகத்தான பெருமையுடன், இந்தியாவில் தயாரிக்கப்பட்டதை வழங்குகிறோம்…” என பதிவிட்டு இருந்தார்.


ப்ரொட்யூசராக ராஜமௌலியின் மகன் :


படத்தின் இயக்குநர் நிதின் கக்கர் ஃபிலிமிஸ்தான் (2012), மித்ரோன் (2018), நோட்புக் (2019), ஜவானி ஜான்மேன் (2020), மற்றும் ராம் சிங் சார்லி (2020) போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் முதல் தயாரிப்பு முயற்சி இது என்றாலும் அவர் தனது தந்தையின் ஆர்.ஆர்.ஆர். படத்தின் லைன் ப்ரொட்யூசராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 எஸ்.எஸ். ராஜமௌலி என்ற பெயர் ஒரு படத்துடன் இணைக்கப்படுவது நிச்சயமாக அப்படம் குறித்த ஆவலை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து சலசலப்பை ஏற்படுத்தும். இதுவரையில் ஒரு இயக்குனராக அவர் ஒருபோதும் அவரின் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. அதே எதிர்பார்ப்பு மேட் இன் இந்தியா திரைப்படத்துக்கும் எழுந்துள்ளது. 


எஸ்.எஸ். ராஜமௌலி முதல் முறையாக நடிகர் மகேஷ் பாபுவுடன் தனது அடுத்த படத்தில் இணைய உள்ளார். இதுவரையில் இவர்கள் கூட்டணி சேராததால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. ராஜமௌலியுடனான கூட்டணி ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதுவே மகேஷ் பாபுவின் விருப்பமாக இருக்கும்.