AIADMK vs BJP: 'கூட்டணியும் கிடையாது, புண்ணாக்கும் கிடையாது' - அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் காட்டம்

AIADMK BJP Alliance: எஸ்.பி. வேலுமணியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், “கூட்டணியும் கிடையாது. ஒரு புண்ணாக்கும் கிடையாது” எனக் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருண்குமார் கூறிச் சென்றார்.

Continues below advertisement

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், “எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெல்லும். அதிமுக கூட்டணியில் யார் அங்கம் வகித்தாலும் அவர்கள் செல்லும் நோட்டு. டாலர் நோட்டு. கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் கிழிந்த இத்துப்போன செல்லாத நோட்டு. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகவும், எடப்பாடி பழனிசாமியை யார் தலைவராக ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி” எனத் தெரிவித்தார்.

Continues below advertisement

இதையடுத்து பேசிய கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், “நேற்றும், முன்தினமும் நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு தெரியும். அவர்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் நமது பணி அமைய வேண்டும். எடப்பாடி பழனிசாமி கைகாட்டியவர் இந்திய பிரதமராக வர வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தின் முடிவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அண்ணாமலையின் பேச்சுகள் தொடர்பாகவும், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. செய்தியாளர் சந்திப்பின் இறுதியில் அண்ணாமலையை நீக்கினாலோ, அல்லது அண்ணாமலை வருத்தம் தெரிவித்தாலோ மீண்டும் கூட்டணி அமைக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அப்போது எஸ்.பி.வேலுமணி அக்கேள்வியை தவிர்த்து பதில் அளிக்காமல் எழுந்து சென்றார்.


இதனைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மேடையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் எஸ்.பி. வேலுமணியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், “கூட்டணியும் கிடையாது. ஒரு புண்ணாக்கும் கிடையாது” எனக் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருண்குமார் கூறிச் சென்றார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக பேசிய எஸ்.பி. வேலுமணி, “எங்களுக்கு ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். எடப்பாடி பழனிசாமி கருத்தே எங்களது கருத்து. வேலுமணி, தங்கமணி பாஜக பற்றி பேசவில்லை என சிலர் சொல்கிறார்கள். எங்களுக்கு எதிரி திமுக தான். இருந்தாலும் கூட்டணிக்காக நாங்கள் தன்மானத்தை விட்டு தர மாட்டோம். அண்ணாமலை கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேச கூடாது. ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை. அண்ணா பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. பெரியார் வந்த பின்னர் தான் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தது. அண்ணா மன்னிப்பு கேட்டதாக உண்மைக்கு புறம்பான விஷயங்களை அண்ணாமலை பேசியிருக்க கூடாது. இது ஒரு தலைவருக்கான தகுதியல்ல. அண்ணாமலை உண்மைக்கு புறம்பாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எடப்பாடி பழனிசாமி கிணற்றில் குதிக்க சொன்னாலும் குதிப்போம். எங்களுக்குள் சிண்டு முடியும் வேலையை திமுகவினரும், சில பாஜகவினரும் செய்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி தான் 40 தொகுதிகளிலும் வெல்லும். நமக்குள் இருப்பது குடும்ப சண்டை தான். கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Continues below advertisement