தீவிர பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அவசியமாகிறது. ஆனால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில உணவு முறைகள் மூலம் டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே தடுக்கலாம் என கூறப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால் ஏ.டி.எஸ்., கொசுக்கள் உருவாகி அதன்மூலம் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதி முழுவதிலும் உள்ள நகர் புற சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30க்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் 11 குழந்தைகள் அடங்குவர், இதேபோன்று மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேலும் 20க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பதினோரு குழந்தைகளில் பெரும்பாலும் 1 முதல் 5 வரையிலான குழந்தைகள் 8 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கும் டெங்கு பாதிப்பு அதிகளவிற்கு ஏற்பட்டுள்ளது.
”மதுரை மாநகராட்சி சார்பில் எதிர்வரும் மழை காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 14.09.2023 அன்று மேயர் அவர்கள் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட அறிவுரைகளின்படி மதுரை மாநகராட்சி சார்பில் 530 டெங்கு தடுப்பு பணியாளர்களை கொண்டு வீடுகள் தோறும் சென்று டெங்கு கொசு புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சீரிய முறையில் கொசு புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏ.டி.எஸ் புழுவானது செயற்கையாக தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் வளரும் கொசுவாகும். பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது கட்டிடங்களில் கொசுப்புழு வளராத வண்ணம் சுத்தம் செய்து, பழைய டயர்கள் தேங்காள் சிரட்டைகள், ஆட்டுக்கல், ட்ரம்களை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தண்ணீர் சேமித்து வைக்கும் படிரம்களில் மற்றும் தொட்டிகளை தேய்த்து சுத்தம் செய்து மூடி வைக்க வேண்டும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது” என மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.