பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா தனது இரண்டாவது திருமண நாளில் மறைந்த தனது கணவர் பற்றி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், “என் அன்பான கணவனே, இனிய திருமணநாள் வாழ்த்துகள். நான் உன்னைப் பற்றி உணரும் விதத்தை இந்த உலகம் நினைத்தாலும் தடுக்கவும் முடியாது. உன் மீதான என் அன்பை எதுவும் மாற்றவும் முடியாது. இந்த உலகத்தின் கண்ணோட்டத்தின்படி நான் தனியாகக் கொண்டாடும் முதல் திருமண நாள் இதுவாக இருக்கலாம், ஆனால் எனக்கு அப்படி ஒருபோதும் இருக்காது. ஏனென்றால் உன்னுடைய இருப்பை நான் எப்போதும் என் பக்கத்தில் உணர்கிறேன்.


நம்முடைய இந்த சிறப்பான நாளில் கண்ணீர் சிந்தாமல், ஒவ்வொரு நாளும் உன்னுடைய இருப்பை இன்னும் உறுதியாக நம்பி, நான் உங்களுக்கு ஒருபோதும் கொடுக்கப்போவதில்லை. நான் அழுவது உனக்குப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும், அதனால் என் மனதை தைரியமாக வைத்துக் கொண்டு, உனக்குப் பிடித்த காரியங்களைச் செய்து, உன்னை என் பாதுகாவலனாக வைத்துக் கொண்டால், உன்னைப் பெருமைப்படுத்தி, நாம் கனவு கண்ட வாழ்க்கையை முழு மனதுடன் வாழ்வேன். ஐ லவ் யூ. மீண்டும் உன்னை சந்திக்க காத்திருக்கிறேன்.  உன்னை இறுக்கமாக கட்டியணைத்து கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 


இதனைக் கண்ட அவரது ரசிகர்களும் இணையவாசிகளும், தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், “தைரியமாக இருங்கள்” என்றும், “நீங்கள் போடும் ஒவ்வொரு post பாக்கும் போது கஷ்டமாக இருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளனர். 






ஸ்ருதி சண்முக பிரியா பயணம்


சன் டிவியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்' என்ற பிரபலமான தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. அந்த சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடத்தில் அளித்தது. தொடர்ந்து வாணி ராணி, கல்யாணப் பரிசு, பாரதி கண்ணம்மா என சில சீரியல்களில் நடித்த அவர் தன் கணவரின் மறைவுக்குப் பின் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.  


2022 ஆம் ஆண்டு மே மாதம் அரவிந்த் சேகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட ஸ்ருதி சண்முகப்பிரியா தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக  கடந்த ஆகஸ்ட் மாதம் அரவிந்த் சேகர் மாரடைப்பால் காலமானார். அதன்பிறகு கணவரின் நினைவுகளுடன் முடங்கிய ஸ்ருதி, தற்போது அதிலிருந்து சற்று மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.