தீவிர புயலாக வலுவடைந்த ‘ரெமால் புயல்’ வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் அருகே கரையை கடந்தது.
கடந்த 6 மணிநேரத்தில் 13 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து மோங்லா என்னும் பகுதியில் ‘ரெமல்’ புயல் கரையை கடந்தது. வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, புயல் கரையை கடந்தபோது, காற்றானது மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்று. வீசியது. இந்த புயலானது மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கும் வங்கதேசத்தின் கெயுபாடாவுக்கும் இடையே உள்ள கடற்கரையில் கடந்தது. தற்போது ரெமால் புயலானது வலுவிழந்துள்ள நிலையில், புயல் பாதிப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என தெரிவித்துள்ளது.
இன்னும் 2 மணிநேரம் மழை நீடிக்கும் - IMD
ரெமல் புயல் தொடர்பான சமீபத்திய தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது. அதில், வடக்கு வங்கக் கடலில் கடந்த 6 மணி நேரத்தில் 13 கிமீ வேகத்தில் ரெமல் என்ற கடுமையான புயல் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்தது. இந்த கடுமையான புயலின்போது, காற்றின் வேகம் மணிக்கு 110 - 120 கிமீ முதல் மணிக்கு 135 கிமீ வரை அதிகரித்தது. புயல் கரையை கடந்தாலும் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோரப் பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று தொடரும்.
இதே நிலையில், இன்னும் 2 மணி நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மே 27-28 தேதிகளில் மிக அதிக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், புயலின் தாக்கம் காரணமாக, மேற்கு வங்கத்தின் தென் மாவட்டங்கள் - வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், கொல்கத்தா, கிழக்கு மிட்னாபூர், ஹவுரா, ஹூக்ளி ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
நிவாரண மற்றும் மீட்பு பணிகள் குறித்து தெற்கு கொல்கத்தா துணை ஆணையர் பிரியபிரதா ராய் கூறுகையில், “புயலின் காரணமாக சில இடங்களில் மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. கொல்கத்தா நகராட்சியின் குழுவும், கொல்கத்தா காவல்துறையின் பேரிடர் மேலாண்மைக் குழுவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றுள்ளன. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. காலைக்குள் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூறாவளி புயல் குறித்த காவல்துறையின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை இரவு முழுவதும் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை:
ரெமல் புயலில் தாக்கத்தால் மேற்கு வங்கத்தின் சாகர் தீவு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நல்லவேளையாக பெரியளவில் உயிர் சேதம் ஏற்படவில்லை. கொல்கத்தா முழுவதும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்துள்ளன. இதையடுத்து சேதம் அடைந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.