சினிமா ஆர்வலர்களின் அத்தனை கண்களும் ஏப்ரல் 14ல் வெளியாகும் கேஜிஎஃப் சேப்டர் 2வை எதிர்நோக்கித்தான் இருக்கின்றன என்றால் அது மிகையல்ல.


இந்நிலையில் அந்தப் படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் 2016ல் மிஸ் சூப்ராநேஷனல் விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நான் 2016ல் கேஜிஎஃப் 1ல் நடிக்க ஆரம்பித்தபோது என்னுடன் ஃபீல்டில் கால் பதித்தவர்கள் பலரும் அதன் பின்னர் 10 படங்கள் பண்ணிவிட்டனர். இது எனக்குக் கொஞ்சம் பயத்தைத் தந்தது. அதில் நான் பொய் சொல்லமாட்டேன். என் நண்பர்கள், குடும்பத்தினர் எல்லோரும் என்னாச்சு உனக்கு, ஒரு படத்திலேயே இருக்கிறாய் என்று கேட்பார்கள். ஆனால் அந்த காத்திருப்பு தகுந்ததே. படம் மிகவும் அழகாக உருவாகியுள்ளது. நான் படம் உருவாகும் ஒட்டுமொத்த பிராசஸிலும் இருந்துள்ளேன். அதனால் தான் இவ்வளவு நம்பிக்க்கையுடன் சொல்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது என்று கூறியுள்ளார்.


கேஜிஎஃப் படத்தை முடித்துக் கொடுக்கும் வரை வேறு படத்தில் கமிட் ஆவதில்லை என்றே ஸ்ரீந்தி ஷெட்டி இருந்துள்ளார். இடையில் 2019ல் தமிழில் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக கோப்ராவில் விக்ரமுக்கு ஜோடியாக ஒப்பந்தம் ஆகினார்.
கேஜிஎஃப் இரண்டு பாகங்களாக உருவாகும் என்று தான் நினைக்கவில்லை என்று கூறும் ஸ்ரீநிதி இரண்டாம் பகாம் ரிலீஸ் அறிவிப்புக்கு இடையே தன்னிடம் 9 இயக்குநர்கள் கதை கூறியதாகவும் ஆனால் அதில் கோப்ராவை மட்டுமே ஏற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார்.


என் வாழ்க்கையில் 10 ஆண்டுகளில் நான் வெறும் 5 படங்கள் மட்டுமே நடித்தாலும் கூட பரவாயில்லை. ஆனால் எதிர்காலத்தில் திரும்பிப் பார்க்கும் போது அந்த ஐந்து படங்களும் வெற்றிப் படங்களாக இருக்க வேண்டும். நான் பதறிக் கொண்டு படங்களில் நடிக்க விரும்பவில்லை. நான் மிகவும் கவனமாக படங்களை தேர்வு செய்து நடிக்கவே விரும்புகிறேன். கேஜிஎஃப் பிரான்சைஸில் ஆறு ஆண்டு கால அனுபவம் மிகவும் வலிமையானது என்று கூறுகிறார் ஸ்ரீநிதி.


யஷ் பற்றி சொல்லவேண்டுமென்றால்..


யஷ் பற்றி சொல்லவேண்டுமென்றால்.. என்று ஆரம்பித்த ஸ்ரீநிதி, 2017ல் தான் நாங்கள் முதன்முதலில் பார்த்தோம். அதுவரை நான் அவரை திரையில் தான் பார்த்திருந்தேன் என்பதால். அந்த சந்திப்புக்காக ஆவலுடன் சற்றே நடுக்கத்துடன் காத்திருந்தேன். அவர் ரொம்ப கூலான நபர். என்னை ஆசுவாசப்படுத்தி இயல்புநிலைக்குக் கொண்டு வந்தார். அதுமட்டுமல்ல அவர் மிகவும் நேர்த்தியான நடிகர். தொழிலில் கவனமாக இருப்பார். எனக்கு ஏதாவது நடிப்பில் உதவி என்று கேட்டால் உடனே செய்வார். நான் ஷாட்டுக்கு தயாராகும் வரை பொறுத்திருப்பார். அவருடன் நடித்தது எனது அதிர்ஷ்டம் என்றே கூறுவேன் என்றார்.




ஏப்ரல் 14ல் ரிலீஸ்..


கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் இரண்டாண்டுகளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு சமீபத்தில் அறிவித்தது. வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.