பாலிவுட் நடன இயக்குநரும் வில்லன் நடிகருமான கணேஷ் ஆச்சார்யா(Ganesh Acharya) மீது நடனக் குழுவில் இருந்த இளம் பெண் கொடுத்த பாலியல் வழக்கு விசாரணையை மேற்கொண்டிருந்த போலீஸார், நடிகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


பாலிவுட் திரையுலகில் பிரபல நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா. இவர் தமிழில் நடிகர் ஜீவாவின் ரவுத்திரம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இந்த நிலையில், கணேஷ் ஆச்சார்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைப்படுத்துவதாக அவரது நடனக்குழுவில் பணிபுரிந்து வந்த 35 வயது நடன நடிகை மும்பை அம்போலி போலீஸ் நிலையத்திலும், பெண்கள் கமிஷனிலும் புகார் கொடுத்தார்.


இந்தப் புகாரை ஏற்ற போலீஸார், கணேஷ் ஆச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கணேஷ் ஆச்சார்யாவுக்கு உடந்தையாக செயல்பட்டு நடன மங்கையை அடித்து உதைத்து துன்புறுத்தியதாக ஜெயஸ்ரீ கேல்கர், பிரீத்தி லாட் ஆகிய இரண்டு பெண்கள் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுநாள் வரை விசாரணை நடத்தி வந்த போலீஸார் இப்போது கணேஷ் ஆச்சார்யாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.


இந்தப் புகாரை விசாரித்த காவல்துறை அதிகாரி, சந்தீப் ஷிண்டே கூறுகையில், மும்பை அந்தேரி மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் தான் அண்மையில் நாங்கள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தோம். கணேஷ் ஆச்சார்யா மற்றும் அவரது உதவியாளர் மீது 354-a (பாலியல் வன்கொடுமை), 354-c (பார்வை மோகம் ), 354-d (பெண்ணை பின்தொடர்தல்), 509 (ஒரு பெண்ணின் மாண்புக்கு அவமதிப்பு ஏற்படுத்துதல்), 323 (துன்புறுத்தல்), 504 (அமைதியைக் குலைக்கும் வகையில் நடத்தல்), 506 (கிரிமினல் குற்றம்) and 34 (தவறு இழைக்கும் நோக்குடன் செயல்படுதல்) ஆகிய ஐபிசி சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.



கணேஷ் ஆச்சார்யாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை குறித்து தனக்கும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட இளம் பெண்.


ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டை கணேஷ் ஆச்சார்யா திட்டவட்டமாக மறுத்துவந்தார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறிவந்தார். இந்நிலையில், புகாரை விசாரித்து போலீஸார் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க பாலிவுட் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா கருத்தும் ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டார். அவரது வழக்கறிஞர் ரவி சூர்யவன்சியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வழக்கறிஞர் சூரியவன்சி, என்னிட்டம் குற்றப்பத்திரிகை நகல் இல்லை. அதனால் விவரமாக எதுவும் பேச இயலாது. ஆனால், வழக்கு செய்யப்பட்டுள்ள பிரிவுகளை அனைத்துமே ஜாமீன் பெறத்தக்கவையே என்று கூறினார்.