நடிகர்கள் தனுஷ், ஐஸ்வர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் குறித்து பல்வேறு தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையே இலங்கை நாடாளுமன்றத்தின் தமிழ் எம்.பி.யான மனோ கணேசன் இந்தத் திரைப்படம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். தன் படத்தில் இலங்கை இன அரசியலைப் பேசியிருப்பதற்கு கார்த்திக் சுப்புராஜுக்கு அவர் தனது விமர்சனத்தில் நன்றி தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ள விமர்சனம் பின்வருமாறு,
'நேற்று இரவு பார்க்க நேரம் கிடைத்தது.
இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வாறார் என தெரிகிறது. ஆனால், என்ன சொல்ல வருகிறார் என்பது கடைசிவரை சரியா புரியலை.
தனுஷ், ஜேம்ஸ் கொஸ்மோ, ஜோர்ஜ், ஐஷ்வர்யா. நடிகர்களின் திறமை வேஸ்ட்.
கடைசி காட்சி அபத்தத்தின் உச்சம். ஆனால், அகதி பிரச்சினையை காட்ட வேண்டும் என்ற விருப்பம் மெச்சத்தக்கது.
அதற்காக கடைசியில், வெள்ளைகார வில்லனை, (சொல்கிறார்கள்..) “அந்த பக்கம் சிரியா, இந்த பக்கம் ஆப்கன், சொந்த பக்கம் ஈரான்” என்ற ஒரு கட்டாந்தரையை காட்டி அவரை அங்கே இறக்கி விட்டு, ஒரு இல்லாத போலி நாட்டு பாஸ்போர்ட் மாதிரி ஒன்றை கொடுத்து விட்டு போகிறார்களாம். அங்கே இருந்து அவர் நாடில்லாமல் கஷ்டப்பட போகின்றாராம் என்பதுதான் இதன் செய்தி.
சில விஷயங்கள் எழுத்தில் எழுதி படித்து, பார்க்கும் போது, தர்க்கரீதியாக கதை பொருத்தமாக இருக்கும். ஆனால், திரையில் கதையை படமாக்கும் போது ஊற்றிக்கொள்ளும். அதுதான் இது.
இங்கிலாந்து பிரஜையான அந்த வில்லன் உடனே அங்கே அந்த நாட்டில் உள்ள தன் நாட்டு தூதகத்துக்கு போய், சுலபமாக தன் தாய்நாடு போய் விடுவார். இங்கே என்னையா அகதி பிரச்சினை?
ஆனால், ரஜனிகாந்தை வைத்து சென்னையில் மெகா படங்கள் எடுக்கும் இலங்கை தமிழ் தயாரிப்பாளர்களே, இலங்கை இனப்பிரச்சினையை பற்றி படம் எடுக்காத போது, இலங்கை இந்திய சந்தையில் எந்தளவு இலங்கை இனப்பிரச்சினையை பற்றிய கதையை இந்த அரசுகள் அனுமதிக்கும் என்கின்ற போது, (ஆனால், இந்த படம் தியட்டரில் வரவில்லை. OTT தளப்படம். ஆகவே சுதந்திரம் கொஞ்சம் அதிகம்), இந்த படத்தின் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், வசனங்கள் மூலம் பல இடங்களில் நமது நாட்டு இனப்பிரச்சினையின் சில பரிமாணங்களை சொல்ல முன்வந்துள்ளார் என்பதை மனந்திறந்து பாராட்டத்தான் வேண்டும்.
இலங்கை அகதிகளின் பாடு, அவர்களின் துன்பம் நிறைந்த பயணம், புலம் பெயர்ந்து செல்லும் நாட்டில் எதிர்மறை வரவேற்பு, இந்தியாவில் இலங்கை அகதிகளை அதிகாரபூர்வமாக இன்னமும் அகதிகளாக ஏற்காமை, தமிழினம் எப்போதும் துரோகம் என்பதாலேயே தோற்கிறது, ஆயுதம் தூக்க ஏற்படும் நிர்பந்தம்.... ஆகியவை பற்றி கதாபாத்திரங்கள் பேசுகிறார்கள்.
அப்புறம் காட்சிகளில் குண்டு வீச்சும் வருகிறது. இலங்கை ராணுவத்தினர் சிங்களமும் பேசுகிறார்கள்.
ஆனால், மிஸ்டர் கார்த்தி சுப்புராஜ், இது பன்னிரண்டு ஆண்டுகள் லேட். இப்போ இலங்கையில் இனவாதம்தான் இருக்கிறது. இப்போ குண்டு வீச்சு இல்லையே..!
ஆகவே இலங்கை தமிழர்களை இனியும் வெளிநாட்டை நோக்கி, அகதிகளாக ஓட வலியுறுத்தும் எதையும் என்னால் ஆதரிக்க முடியாது. இனி இங்கே இருந்துதான் ஜனநாயகமாக போராட வலியுறுத்த வேண்டும். இங்கே நாட்டில் தமிழர் தங்கி இருக்க வேண்டும்.
ஏற்கனவே தமிழர் ஜனத்தொகை குறைந்து விட்டது. இதில் நம் நிலங்களை காலி செய்து, இனியும் வெளிநாட்டுக்கு ஓடி விட்டு, அப்புறம், எங்கள் நிலத்தில் சிங்கள குடியேற்றம் நிகழ்கிறது என ஓலமிட்டு முறையிடுவது எரிச்சல்-நகைச்சுவை' எனப் பதிவிட்டுள்ளார்.
Also Read: வரி மோசடி... வைர முதலீடு... விசாரணையில் குற்றங்களை பட்டியலிடும் மதன்!
Also Read: வரி மோசடி... வைர முதலீடு... விசாரணையில் குற்றங்களை பட்டியலிடும் மதன்!