யூடியூப் மூலம் சட்டவிரோதமாக பப்ஜி விளையாடி கோடி கோடியாய் வருவாய் ஈட்டியதோடு, ஆபாசமாக பேசி பெண்களை இழிவுபடுத்தியது, ஆபாச வார்த்தைகளால் மிரட்டியது என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குவிந்த நிலையில், சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீசார் மதன் என்கிற மதன் குமார் மாணிக்கம் மீது வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு வலை வீசிய நிலையில் திடீரென தலைமறைவானார். சேலத்தில் கைது செய்யப்பட்ட அவரது மனைவி கிருத்திகா, மதனின் யூடியூப் சேனலுக்கு அட்மின் என்பது தெரியவந்த நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்நிலையில் நேற்று தர்மபுரி அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்த மதனை, தனிப்படை போலீசார் பிடித்தனர். அப்போது போலீசாரிடம் கால்களை பிடித்து கெஞ்சிய மதன், தன்னை மன்னித்துவிடுமாறும், இனி இது போன்ற தவறு செய்ய மாட்டேன் என கதறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றர். 




முன்னதாக அவரது லேப்டாப், மெமரி கார்டு, இரு சொகுசு கார்கள் மற்றும் 4 கோடி ரூபாய் பணம் இருந்த கிருத்திகாவின் வங்கி கணக்கு ஆகியவை போலீசாரால் முடக்கப்பட்டது. மதனின் வீடியோக்களை அவரது நண்பர்கள் சிலரும் , தங்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்தது தெரியவந்தது. அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் பற்றிய விபரமும், மதனின் யூடியூப் சேனலில்  பணியாற்றிய தொழில்நுட்ப பணியாளர்கள் யார் என்கிற விபரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். இன்று மாலை மதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு முன் அவரிடம் பல தகவல்களை சேகரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 


விசாரணையில் மதன் அளித்த வாக்குமூலம்!


மதனிடம் குற்றப்பிரிவு போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் பல தகவல்களை அவர் கூறியுள்ளார். அவற்றில் சில:


மதன் தினமும் 20 மணி நேரம் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். நேரம் அதிகரிக்க அதிகரிக்க பணம் கொட்டியுள்ளது. 


விளையாட வரும் பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ளார். 


மதனின் மனைவியின் வங்கி கணக்கில் மட்டும் 4 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது. இது சில சிறிது பணம் கையிருப்பு இருந்துள்ளது.


தாம்பரம்,  பெருங்களத்தூரில் 45 இலட்சம் மதிப்பில் இரு சொகுசு பங்களாக்கள் மற்றும்  2 சொகுசு கார்கள் வாங்கியுள்ளார்.


பணத்தை பெரும்பாலும் தங்க மற்றும்  வைர நகைகளில் முதலீடு செய்துள்ளார். 


இது குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்..


மதனை நம்பி பணத்தை ஏமாந்தவர்கள் 5 ஆயிரம் ரூபாயாக இருந்தால் கூட காவல் துறையில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏமாந்தவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களது பணம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களது ரகசியம் காக்கப்படம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.




வரி ஏய்ப்பில் மதன்!


யூடியூப் மூலமாக சம்பாதித்த பணத்திற்கு மதன் முறையான வருமான வரி செலுத்தவில்லை. முழுக்க முழுக்க வரி ஏய்ப்பில் மதன் ஈடுபட்டதும், பணம் முழுவதையும் முதலீடுகளில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதுவரை அவர் சம்பாதித்த தொகை எவ்வளவு, அதற்கு செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர் மீது வரி ஏய்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த விசாரணை நிறைவு பெற்ற பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் மதன், இன்று மாலையே சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.