சின்னத்திரை நடிகை ஸ்ரீதுர்கா. அழகான சிரிப்பு. ஆர்ப்பாட்டம் இல்லாத அழகு. அப்படித்தானே நமக்கு அவரைத் தெரியும். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து சின்னத்திரையில் குடும்ப நட்சத்திரமாக அறியப்படும் அவர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.


அதில் அவர், எனக்கு சின்ன வயதில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை. ஆனால் யதார்த்தமாக நடிப்புக்கு வாய்ப்பு வந்தது. நடித்தேன். இன்று ஒரு செலிப்ரிட்டியாக அறியப்படுகிறேன். நான் வெளியே செல்லும் போது என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள யாரேனும் வரும்போது எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது. எனக்கும் என் கணவருக்கும் திருமணம் ஆனதே ஒரு சுவாரஸ்யமானது. என்னை நிறைய பேர் பெண் பார்த்துச் சென்றனர். ஆனால், நான் இவரைப் பார்த்தபோதுதான் எனக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறந்தது. இவர் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை வந்தது. அப்படித்தான் நான் அவரைக் கல்யாணம் செய்து கொண்டேன்.


என்னுடைய எல்லா பேட்டியிலுமே நான் அஜித் சாருடன் நடித்தது பற்றி பேசியிருப்பேன். அப்போது நான் ஒரு குழந்தை. அவர் எல்லோரிடமும் நன்றாகப்


பழகுவார். அவர் அன்பானவர். பண்பானவர். எனக்கு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் எப்போதும் பொக்கிஷம்.


எனக்கு யானை என்றால் ரொம்பப் பிடிக்கும். யானை, பீச் இந்த இரண்டையும் பார்த்துவிட்டால் போதும் அப்படியே நின்றுவிடுவேன். அசையவே மாட்டேன். நான் சிறுவயதிலிருந்தே நடித்துக் கொண்டிருக்கிறேன். சில காலம் மாடலிங் துறையில் இருந்தேன். தற்போது பத்து வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில்தான் இருக்கிறேன். சன் டி.வி.யில்  "உறவுகள்', தியாகம் , முந்தானை முடிச்சு தொடர்கள் எனக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்துள்ளன.


இதுவரை நடித்த எல்லா கேரக்டருமே பிடிக்கும். "ஊஞ்சல்', "அலைகள்', "சிகரம்' என எல்லாமே. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் "ஊஞ்சல்' தொடரில் நடித்த வேடம். அதில் முதல் பாதியில் நெகட்டிவ் கேரக்டர் செய்திருந்தேன். இரண்டாம் பாதியில் செய்த தவறை உணர்ந்து திருந்தி வாழும் பாஸிடீவான கேரக்டர். அது ரொம்ப பிடித்திருந்தது. ஒரு சில படங்கள் நடித்திருக்கிறேன். எனக்கு முக்கியத்துவம் இருப்பது போன்ற நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.  


எனக்கு நடிப்பு தவிர பாடுவதும், ஆடுவதும் ரொம்ப பிடிக்கும். என் குடும்பமே ஒரு சங்கீத குடும்பம். நானும் முறைப்படி சங்கீதம் பயின்றிருக்கிறேன். அதனால் அந்தத் துறையில் வர வேண்டும் நினைப்பேன். அதுதவிர சின்ன வயதிலிருந்தே போட்டோகிராபி மேல் ஆசை உண்டு. அதனால் சினிமாடோகிராபராக வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. வருங்காலத்தில் இசைப்பள்ளி நடத்த வேண்டும் என்று ஆசை உண்டு. இப்போது ஸ்லோகம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன்.


நான் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதற்கு கல்வி, வேறு சீரியல்களில் பிஸியாக இருந்ததே காரணம் என்றார்.