ராயல்டி பிரச்சனையால் ஸ்பாட்டிஃபை நிறுவனம் தனது தளத்தில் இருந்து முன்னணி காமெடி நடிகர்களின் படைப்புகளை நீக்கும் சூழல் நேர்ந்துள்ளது.


ஸ்பாட்டிபை என்பது சர்வதேச அளவில் இயங்கும், ஆடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனம். இது 23 ஏப்ரல் 2006 இல் டேனியல் ஏக் மற்றும் மார்ட்டின் லோரென்ட்ஸனால் நிறுவப்பட்டது. தற்போது உலகின் மிகப்பெரிய ஆடியோ ஸ்ட்ரீமிங் சேவை வழங்குநர்களில் ஒன்றாக உள்ளது. ஜூன் 2021 நிலவரப்படி ஸ்பாட்டிஃபைக்கு, 165 மில்லியன் பணம் செலுத்தும் சந்தாதாரர்கள் உட்பட 365 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்கள் உள்ளனர். ஸ்பாட்டிபை 70 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


சமீப காலமாக தமிழகத்திலும் ஸ்பாட்டிஃபை சப்ஸ்க்ரிப்ஷன் வேகமெடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதுவும், மன்றம் வந்த தென்றலுக்கு பாடலை ஹம் செய்து இசைஞானி இளையராஜா ஸ்பாட்டிஃபை  விளம்பரத்தில் தோன்றிய பின்னர் அதன் மவுசு டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது.


இந்நிலையில் தான், ஸ்பாட்டிஃபை நிறுவனம் ராயல்டி பிரச்சனையால் கெவின் ஹார்ட், டிஃப்பானி ஹதீஷ், ஜான் முலானி, ஜிம் காஃப்ஃபிகன்  அகீயோரின் காமெடி ட்ராக்குகளை நீக்கியுள்ளது. இதில் கவனிக்கபட வேண்டியது என்னவென்றால், வெளிநாடுகளில் ஸ்பாட்டிஃபையை சப்ஸ்க்ரைப் செய்துள்ள லட்சக்கணக்கானோரில் பெரும்பாலோனோ இந்த காமெடி ட்ராக்குகளுக்காகவே இதனை பின்தொடர்கின்றனர் என்பதே. இந்நிலையில் தான் இந்த காமெடி கலைஞர்கள் தங்களின் படைப்புகளுக்கு ராயல்டி கோரியுள்ளனர். ஸ்பாட்டிஃபை, பண்டோரா, யூடியூப், சிரியஸ் எக்ஸ்எம் எனப் பல்வேறு தளங்களிலும் வெளியாகிக் கொண்டிருக்கும் தங்களின் படைப்புகளுக்கு ராயல்டி கோரத் தொடங்கியுள்ளனர்.




ஸ்போக்கன் ஜயன்ட்ஸ் எனப்படும் சர்வதேச உரிமைகள் நிர்வாக நிறுவனமானது, காமெடி நடிகர்கள் ரசிகர்களை மகிழ்விப்பதற்கு ஏற்ற சன்மானத்தை ராயல்டி வாயிலாகப் பெறத் தகுதியானவர்களே என்று தெரிவித்துள்ளது. ஸ்பாட்டிஃபை போன்ற ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் தங்கள் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி காமெடி நடிகர்களின் கோரிக்கைக்காக ஸ்பாட்டிஃபை, பண்டோரா, யூடியூப், சிரியஸ் எக்ஸ்எம் ஆகிய நிறுவனங்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 


ஒரு டிஜிட்டல் தளமானது இந்த காமெடி நடிகர்களின் படைப்புகளை ஒலிபரப்பும் போது அவர்களின் பிராண்ட் லேபிள் அல்லது விநியோகஸ்தாருக்கு பணம் செல்கிறது, ஆனால், அந்த டிராக்கை எழுதியவர்கள் என்ற முறையில் அந்த நடிகர்களுக்கு எதுவும் சென்று சேர்வதில்லை என்று சவுண்ட் எக்ஸ்சேஞ் என்ற டிஜிட்டல் உரிமைகள் அமைப்பு கூறுகிறது. அதனாலே, ஸ்போக்கன் ஜயன்ட்ஸ் இந்த நடைமுறையை மாற்றி காமெடி நடிகர்களுக்கும் உரிய ராயல்டி கிடைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுவதாக அமெரிக்காவின் வாஷிங்டன் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


இந்தச் சூழலில் சமரசப் பேச்சுவார்த்தை தோவியடைந்ததால், ஸ்பாட்டிஃபை நிறுவனம் நூற்றுக்கணக்கான படைப்புகளை தனது தளத்தில் இருந்து நீக்கியுள்ளது. மீண்டும் ஸ்போக்கன் ஜயன்ட்ஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தையை ஸ்பாட்டிஃபை மேற்கொள்ளுமா என்பது பற்றி எந்தத் தகவலும் இப்போதைக்கு தெரிவிக்கப்படவில்லை. 


ராயல்டி என்றால் என்ன?


ராயல்டி (உரிமம்) எனப்படுவது ஒரு நிறுவனம் அல்லது தனிநபர் (உரிமதாரர் –licensor) மற்றொரு நிறுவனத்திற்கு அல்லது தனிநபருக்கு (licensee) தன்னுடைய அறிவுசார்ந்த அல்லது பொருட்சார்ந்த உரிமையைப் பயன்படுத்த அல்லது விற்பனைச் செய்ய அனுமதித்ததற்காக வழங்கப்படும் ஒருவகை கட்டணமாகும். ராயல்டி முறையை பரவலாக பயன்படுத்தும் துறைகளாக இசைத்துறை, ஓவியத்துறை, புத்தகத்துறை, ஊடகத்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை போன்றவை திகழ்கின்றன. எளிதில் எடுத்துரைக்க வேண்டுமானால், ராயல்டி என்பது ஒரு வகை உரிமையியல் கட்டணம்.