இன்று பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் 78 ஆவது பிறந்தநாள். கிட்டதட்ட 16 மொழிகளில் மொத்தம் 40,000 பாடல்களை பாடி ஆறு தேசிய விருதுகளை வென்று இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வென்றுள்ளார். அவரது வென்ற மிகப்பெரிய மற்றொரு விருது என்னத் தெரியுமா கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை.


தனது குழந்தைமையான குணத்தாலும், நகைச்சுவை உணர்வாலும் அனைவரது மனதிலும் ஏதோ ஒரு நினைவாக நிலைத்து நிற்பவர் எஸ்.பி.பி. யூடியூபில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் ஏதாவது ஒரு வீடியோவை எடுத்து எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டு இருக்கலாம். பாடல்களின் வழியாகவோ, நகைச்சுவை வழியாகவோ, அல்லது மனதிற்கு நம்பிக்கை அளிக்கு அவரது சொற்களின் வழியாகவோ ஏதோ ஒரு வகையில்  நம்மை மகிழ்ச்சியாக்கி விடக்கூடியவர்.  எஸ்.பி.பி குறித்து திரையுலக பிரபலங்கள் நிறைய சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள் அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்


ஹாரிஸ் ஜெயராஜ்


 தேவ் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடலைப் பாட வந்துள்ளார் எஸ்.பி.பி. அப்போது அவரது கார் டிரைவர் ஹாரிஸ் ஜெயராஜுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினாராம். அவரது செல்போனை வாங்கி தானே மூவரையும் செல்ஃபி எடுத்திருக்கிறார் எஸ்.பி.பி. புகைப்படம் எடுத்துமுடித்தப் பின் தனது டிரைவரிடம் “இப்போ உனக்கு சந்தோசமா’ என்று கேட்டிருக்கிறார். அந்த குரலை நீங்களும் ஒரு நொடி மனதில் கேட்டீர்கள் தானே?


நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாவனா


விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த பாவனா ஒரு முறை எஸ்.பி.பி யை பார்த்த உற்சாகத்தில் அவரிடம் சென்று எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்களை போல் ஒருவரின் மேல் எப்படி ஒருவர் காதல் கொள்ளாமல் இருக்க முடியும் ஐ லவ் யூ சார் என்று சொல்லியிருக்கிறார். இதற்கு  என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா அந்த சேட்டை பிடித்த மனிதர் “ நான் இளைஞனாக இருக்குபோது நீ வராம போயிட்டியே”.


 எஸ்.பி. பி யுடனான நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் எஸ்.பி.பியுடையப் பாடல்களை பாட இருந்தார். அதற்குமுன் அவரிடன் “ உங்களது அனுமதியுடன் உங்களுடையப் பாடல்களை நான் பாடப்போகிறேன் என்று கேட்டார். அதற்கு எஸ்.பி.பி  “ என்னுடைய பாடல்களா? நான் பாடிய பாடல்கள் என்று சொல்லுங்கள் அவை என் பாடல்கள் அல்ல” என்று மிகத்தாழ்மையாக கேட்டுக்கொண்டார்.


இந்த நிகழ்வுகளைவிட சுவாரஸ்யமான மற்றொரு விஷயம் எஸ்.பி.பி இசையை பற்றி பேசுவதை கேட்பது. இசையில் பாமரனாக இருக்கும் ஒருவருக்குக் கூட புரியும் வகையில் மிக அழகாக இசையைப் பற்றி பேசக்கூடியவர் அவர்.