திரையுலகை பொறுத்தவரையில் பெரும்பாலான நடிகர்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான் குரல் கொடுப்பார். ஒரு சில சமயங்களில் மொழி பிரச்சினையால் வேறு ஒருவர் டப்பிங் செய்ய நேரிடும். ஆனால் ஒரு சில நடிகர்கள் அவர்களுக்கான போஷன்களில் அவர்கள் மட்டுமே டப்பிங் பேசுவார்கள். அதில் ஒருவர் தான் கணீர் குரலுக்கு சொந்தக்காரரான உலகநாயகன் கமல்ஹாசன். அவரை போல பலரும் மிமிக்கிரி செய்யலாம் ஆனால் ஆச்சு அசலாக அவரின் குரலில் பேச யாராலும் முடியாது.
ஆனால் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மறைந்த பின்னணி பாடகர் பாடும் நிலா எஸ்.பி.பி ஒரு முறை கமல்ஹாசனுக்காக டப்பிங் பேசியுள்ளார் என்பது தான். இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கும் இந்த சூழலில் இந்தியன் முதல் பாகத்தில் நடைபெற்ற ஸ்வாரஸ்யமான சம்பவம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி, செந்தில், கஸ்தூரி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான 'இந்தியன்' திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்த நிலையில் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்ட காப்பியில் இரண்டு இடத்தில் பயன்படுத்தப்பட்ட வசனங்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக புதிய வார்த்தைகளை சேர்க்க சொல்லி சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது. அந்த சமயத்தில் நடிகர் கமல்ஹாசனால் டப்பிங் செய்யும் இடத்திற்கு வர முடியவில்லை.
அதே சமயத்தில் தான் இந்தியன் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு டப்பிங் பேசுவதற்காக எஸ்.பி.பி வந்துள்ளார். எனவே படக்குழு அவரை வைத்தே கமல் டப்பிங் பேச வேண்டிய இடத்தில் புது வார்த்தையை எஸ்.பி.பி குரலில் சேர்த்துள்ளனர். இந்த தகவல் அந்த காட்சியின் வீடியோவுடன் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது ஜூலை 12ம் தேதி வெளியாக தயாராக உள்ளது 'இந்தியன் 2 'திரைப்படம். இப்படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த சூழலில் இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் வீடியோ வைரலாகி வருவது கூடுதல் புரொமோஷனாக உள்ளது.