இரட்டை மடி வலைகளை பயன்படுத்தும் காரைக்கால் மாவட்ட மீனவர்களை தடை செய்யா விட்டால் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தொழில் மறியலில் ஈடுப்பட போவதாக நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டம் அக்கரைப்பேட்டை மீன் பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது.   கூட்டத்தில் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர் கிராம நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி வலைகளை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் பயன்படுத்தி தொழில் செய்வதை தடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில்  காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தமிழ்நாடு கடல் எல்லையில் தொழில் செய்ய வந்தால்  விசைப்படகுகளை சிறைபிடித்து மீன்வளத்துறையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், காரைக்கால் மாவட்ட விசைப்படகுகளுக்கு வியாபார ரீதியாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள  கூடாது எனவும்,  ஐஸ் உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்களை நாகை மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் வழங்க கூடாது என முடிவு செய்துள்ளனர்.  மேலும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து அத்துமீறி தொழில் செய்தால் மீன்பிடி தடைக்காலம் முடிந்தவுடன் வரும் 14ம் தேதி இரவு முதல் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.