ஒடிசா ரயில் விபத்து...உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு..!

பாதுகாப்பை உறுதி செய்யும் கவாச் கருவியை உடனடியாக பொருத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஒடிசா ரயில் விபத்து குறித்து ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில், "பாதுகாப்பை உறுதி செய்யும் கவாச் கருவியை உடனடியாக பொருத்த வழிகாட்டுதல்கள் வெளியிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு:

ரயில்வே அமைப்பில் உள்ள ஆபத்துகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் நிபுணர் குழு ஆராய வேண்டும் என்றும் பொது நல வழக்கில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொண்டு, ரயில்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்பிக்க நிபுணர் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பாக நடந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 290-ஐ கடந்துள்ளது. இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. வரும் புதன்கிழமைக்குள் அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவையை தொடங்கும் நோக்கில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இரண்டாவது நாளாக அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணன் நேரில் பார்வையிட்டார். அப்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

விபத்துக்கு காரணம் என்ன?

ஆய்வுப்பணிகளை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் “ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளார். அது முடிவடைந்து விசாரணை அறிக்கை வந்து சேரட்டும். முன்னதாக விபத்திற்கான காரணம் என்ன, காரணமானவர்கள் யார் என்ன என்பது குறித்து கண்டறிந்துள்ளோம். 

ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம். தற்போதைக்கு  இந்த பாதையில் போக்குவரத்தை சீர் செய்வது தான் எங்களது முக்கிய நோக்கமாக உள்ளது.இன்றோடு ரயில் தடத்தை சீரமைத்து புதன்கிழமை அன்று மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

பிரதமர் மோடி சம்பவ இடத்தில் ஆய்வு செய்துள்ளார். கவாச் பாதுகாப்பு அம்சத்தை குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. அது இருந்திருந்தால் கூட விபத்தை தவிர்த்து இருக்க முடியாது. அதோடு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சொன்னவை எதுவும் விபத்திற்கு காரணமில்லை” எனவும் விளக்கமளித்துள்ளார். 

இந்திய வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத அளவுக்கு மோசமான ரயில் விபத்தாக ஒடிசா ரயில் விபத்து பார்க்கப்படுகிறது.  

Continues below advertisement
Sponsored Links by Taboola