காதல், காமம், அன்பு, பிரிவு, பாசம், நேசம் என தனது குரலால் ஒவ்வொருவரையும் கட்டிப்போட்ட, கண்ணீர் சிந்த வைத்த ’பாட்டுத் தலைவன்’ எஸ்.பி.பியின் நினைவு நாள் இன்று.


எஸ்.பி.பி-யின் பாட்டு எப்போதுமே மனதிற்கு நெருக்கத்தையும் விவரிக்க முடியாத இன்பத்தையும் கொடுக்க வல்லது. எத்தனையோ பாடகர்கள் வாழ்ந்து மறைந்தாலும் நம் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் சில பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு நீங்காத இடம் உண்டு.


திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பதுபோல, எஸ்.பி.பியின் பாடலை கேட்டு உருகாதோர் இவ்வுலகில் இருந்திருக்கவே முடியாது. தூரத்தில் கேட்கும் எஸ்.பி.பி-யின் குரல் மனதின் இறுக்கத்தை அப்படியே மலர்த்திப்போடுவதை ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தருணத்தில் உணர்ந்தே இருப்பார்கள். அவரின் பாடல்கள் நம்மை தூங்க வைக்கும், துன்பப்பட வைக்கும், குளிப்பாட்டி பொட்டு வைத்த ஒரு புதுக்குழந்தையென புன்முறுவல் பூக்க வைக்கும்.


அதுமட்டுமா, காதலிக்கும் ஒவ்வொருவருக்கும் எஸ்.பி.பியின் பாடல்தான் காதுகளில் தவழும் காதல் கீதம். ‘மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ’ என்ற பாடலை காதலர்கள் பாடாமல், கேட்காமல் இருந்துவிட முடியுமா ? ’பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?’என்ற வரிகளை உச்சரிக்காத ஆண்களை-தான் காணமுடியுமா..? ‘வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது, குளுகுளு தென்றல் காற்றும் வீசுது’ என்ற பாடலின் மூலம் எத்தனை எத்தனை நெஞ்சங்களை ஜில்லிட வைத்திருப்பார் எஸ்.பி.பி, இன்றும் காதலர்கள் பேருந்துகளில் பயணித்தால் அவர்களின் ‘ஜனகனமன’ இதுதானே.


எத்தனையோ பாடகர்கள் இருந்தாலும் அனிச்சைச் செயலாய் எஸ்.பி.பியின் பாடல்களை யூடுபில் தேடுவோர் எண்ணிக்கை என்பது எண்ணிலடங்காதது. எஸ்.பி.பியின் குரலில் உள்ள அந்த ‘பாந்தம்’ கேட்பவர்களை கிரங்கடிப்பதே அதற்கு காரணம். எஸ்.பி.பி-யை தவிர வேறு ஒருவர் பாடலையும் கேட்கமாட்டேன் என்று இருப்பவர்களையெல்லாம் எனக்குத் தெரியும். காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவு போல அவர்களுக்கு எஸ்.பி.பி-யின் பாடல்கள்.


’சாமிகிட்ட சொல்லி வச்சு சேர்ந்தது இந்த செல்லக்கிளியே’ என்ற ஒரு பாடலை ஒரு நாள் பூராவும் கேட்டுக்கொண்டிருக்கலாம். சலிக்கவே சலிக்காது. தளபதி திரைப்படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சொல்லடி இந்நாள் நல்ல தேதி’ பாடலில், ’நான் உன்னை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்கமாட்டேன், சேர்ந்ததே நம் ஜீவனே’ என்ற வரிகளை அவர் பாடுவதை கேட்கும்போது உடல் ஒரு நிமிடம் சிலிர்த்தடங்கும்.


’என் காதலே, என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்’ என்ற பாடலில் ‘சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்னத் தரப்போகிறாய்’ என அவர் பாடும் தருணங்கள் எல்லாம் அவ்வளவு ரம்மியமானது. ’பூங்கொடிதான் பூத்ததம்மா, பொன்வண்டுதான் பார்த்ததம்மா’ என்ற பாடலில், காதல் பிரிவின் துயரத்தை பாடி கேட்பவர்களின் நெஞ்சங்களையெல்லாம் கலங்கடித்திருப்பார்.


‘அந்தி மழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’ என்ற ஒரு பாடலின் மூலம் நம் உள்ளங்களில் ஒரே நேரத்தில் ஓராயிரம் தாமரைகளை பூக்கச் செய்வார். அந்த பாடல் பாடும்போது ‘தனிமையிலே வெறுமையிலே, எத்தனை நாளடி இளைமையிலே, கெட்டன இரவுகள், சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இளமையிலேயே’ என்ற வரிகள் வரும்போது அவர் தனது குரலில் செய்யும் ஜாலம் கேட்பவர்களை அப்படியே நெக்குருக வைக்கும்.


திராவிட மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் போன்று, காதலர்களுக்காக பாடலாசிரியர்களின் வரிகளை தன் குரல் மூலம், கேட்பவர்களின் நெஞ்சங்களில் பச்சைக் குத்தியவர் எஸ்.பி.பி.  அவர் மறைந்தாலும் அவரின் பாடல்கள் மூலம் ஒவ்வொருவரின் காதலிலும் வாழ்வாங்கு வாழ்வார்.